யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர் பாதுகாப்பிற்கான WASPAR செயற்றிட்டத்தின் கீழ் இயங்கும் இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தினர் (Young Water Professionals – YWP), அரியாலை-பூம்புகார் மாதிரிக் கிராமத்தில் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான விசேட கள ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் பூம்புகார் கிராமம் மாதிரிக் கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நீர் வளத்தைப் பாதுகாப்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும்.
பூம்புகார் கிராம மக்கள் எதிர்கொள்ளும் நீர் தொடர்பான சவால்கள் மற்றும் அவர்களின் நீர்ப்பயன்பாட்டு முறைகள் குறித்து விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கிராமத்தில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சில கிணறுகளில் நீரின் பௌதிகத் தன்மை (Physical properties) குறித்த முதற்கட்டப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நிலத்தடி நீர் சார்ந்த பிரச்சினைகளை நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் இம்மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன.
“Clean Sri Lanka” திட்டத்தின் ஆரம்ப நிகழ்விலேயே WASPAR மற்றும் YWP பிரதிநிதிகள் துறைசார் ஆலோசகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பூம்புகார் கிராமத்தில் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை நீண்டகால நோக்கில் உறுதி செய்ய முடியும். இந்த ஆரம்பகட்டத் தரவுகள், எதிர்காலத்தில் அப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டங்களுக்கு அடிப்படையாக அமையும்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்நீராக மாறுவதும், கழிவுகளால் மாசடைவதும் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, அரியாலை-பூம்புகார் போன்ற பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாகச் சுத்தமான குடிநீருக்காகப் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில், பல்கலைக்கழக இளம் நிபுணர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்வது வரவேற்கத்தக்கது. இது வெறும் தரவு சேகரிப்போடு நின்றுவிடாமல், நல்லூர் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் பூம்புகார் கிராமத்தை ஒரு உண்மையான “தூய்மையான மற்றும் பசுமையான” மாதிரிக் கிராமமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
#JaffnaWaterSafety #WASPAR_Project #PoompuharJaffna#GroundwaterResearch#CleanSri Lanka

