Home இலங்கை“சட்டமன்ற முதல் அமர்விலேயே இனவழிப்பு தீர்மானம் வேண்டும்!”

“சட்டமன்ற முதல் அமர்விலேயே இனவழிப்பு தீர்மானம் வேண்டும்!”

by admin

 

ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழகத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், புதிய சட்டமன்றத்தின் முதல் அமர்விலேயே இனவழிப்பு மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.  தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பை வலியுறுத்தி இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலாவது தேர்தலிலேயே பாரிய சாதனையைப் படைத்து முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் மீளவும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2009-க்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18-ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ ஈழத்தமிழர்கள் நினைவு கூர்ந்து வருவதை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் மீது நடைபெற்றது ‘இனவழிப்பு’ (Genocide) என்றும், அதற்குச் ‘சர்வதேச குற்றவியல் விசாரணை’ அவசியம் என்றும் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

 தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்,  இம்மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆரம்ப அமர்விலேயே, 2013-ஆம் ஆண்டு தீர்மானத்தை ஒட்டிய அல்லது அதனை வழிமொழியும் ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்,  இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது, சர்வதேச மட்டத்தில் நீதியை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் அரசியல் பலத்தையும், நம்பிக்கையையும் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய், தனது தேர்தல் பரப்புரைகளின் போதும் கொள்கை விளக்கக் கூட்டங்களிலும் ஈழத்தமிழர் விவகாரம் குறித்துப் பலமுறை பேசியுள்ளார். தற்போது அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கி வருவதால், இக்கோரிக்கை அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இந்தக் கடிதமானது, தமிழகத்தின் புதிய அரசுக்கும் ஈழத்தமிழ் தலைமைக்கும் இடையிலான ஒரு ஆரோக்கியமான இராஜதந்திர உறவிற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் இக்கோரிக்கைக்குச் செவிசாய்த்துத் தீர்மானத்தை நிறைவேற்றினால், அது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அவருக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

Screenshot

#CMVijay  #GajendrakumarPonnambalam #Mullivaikkal2026 #TNA_Resolution#TamilGenocideJustice

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More