யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் முடக்கப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் விவகாரத்தில், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தனது தீர்க்கமான கட்டளையை வரும் 21-ஆம் திகதி வழங்கவுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபைக்கும் பலாலி காவற்துறையினருக்கும் இடையே நிலவும் இந்த மோதல் போக்கு, தற்போது சட்ட ரீதியான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தையிட்டியில் உள்ள விகாரை வளாகத்திற்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி இவ்வீதி உத்தியோகபூர்வமாக அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் என்றும், தவறினால் சபை அதனை அகற்றிவிட்டு அதற்கான செலவை விகாராதிபதியிடம் வசூலிக்கும் என்றும் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
விகாராதிபதியின் முறைப்பாட்டை அடுத்து, பலாலி காவற்துறையினர் தவிசாளரை அழைத்து, “வேலியை அகற்றினால் இன நல்லிணக்கம் பாதிக்கும்” எனக்கூறி இப்பணியைக் கைவிடுமாறு அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளனர்.
காவற்துறையினரின் கோரிக்கைக்குத் தவிசாளர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதேச சபையின் நடவடிக்கைக்கு எதிராகப் பலாலி காவற்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்தனர்.
இன்று (2026 மே 11, திங்கட்கிழமை) நடைபெற்ற விசாரணையின் போது, வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி, பிரதேச சபையின் சட்ட ரீதியான அதிகாரங்கள் மற்றும் பொது வீதியை மீட்க வேண்டியதன் அவசியம் குறித்து வலுவான வாதங்களை முன்வைத்தார்.
இன்றைய விசாரணையில் முறைப்பாட்டாளரான விகாராதிபதி சமூகமளிக்காத நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இம்முறைப்பாட்டிற்கு எதிராகச் சட்டப்பூர்வமான வாதங்களை முன்வைத்துள்ளதால், மே 21-ஆம் திகதி வழங்கப்படவுள்ள தீர்ப்பு, வடமாகாணத்தில் உள்ள ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட பொது நிலங்களை மீட்பதற்கான ஒரு சட்ட முன்னுதாரணமாக (Precedent) அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ThaiyittiVihara #ValiNorthPradeshiyaSabha #RoadEncroachment #MallakamCourt #LegalBattle

