Home இலங்கைபேராதனை பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்- பேராசிரியருக்கு வாழ்நாள் தடை:  

பேராதனை பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்- பேராசிரியருக்கு வாழ்நாள் தடை:  

by admin

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் எதிராக இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில், இலங்கை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக செனட் சபை (Senate) பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான முறையான வழிகாட்டல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் பணித்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவப் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் தர விரிவுரையாளர் ஒருவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது முதுதத்துவமாணி (M.Phil) பட்டத்திற்காகப் பயின்று வந்தபோது, அதே பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்னவினால் (W.A. Tilakaratne) பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதை உறுதி செய்ததுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாவது பிரதிவாதியாகப் பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்ன பெயரிடப்பட்டிருந்ததுடன், பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் செனட் சபை உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டிய பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.  மனுதாரருக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து அவரது தாயாரால் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல்கலைக்கழக உள்ளக விசாரணையில், பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் சில உண்மையானவை என நிரூபிக்கப்பட்டிருந்தன

நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீதி மற்றும் சமத்துவ அதிகாரத்தின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம், பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்ன பல்கலைக்கழகக் கட்டமைப்பிலோ அல்லது ஏதேனும் உயர்கல்வி நிறுவனங்களிலோ எந்தவொரு பதவியையும் அல்லது கௌரவப் பதவியையும் வகிப்பதைத் தடை செய்தது. இது தொடர்பான உத்தரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் (UGC) நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், அவ்வாறான புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்குமான முறையான வழிகாட்டல்களை (Guidelines) பல்கலைக்கழக செனட் சபை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்,   பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய நிர்வாகம் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் , விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் அச்சமின்றித் தமது கல்விப் பணிகளைத் தொடர்வதற்கான கௌரவமான சூழலை உருவாக்குவது பல்கலைக்கழகத்தின் பொறுப்பாகும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கல்விக்கூடங்கள் என்பது அறிவு பகிரப்படும் புனிதமான இடங்களாகக் கருதப்படும் நிலையில், அங்கேயே அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாலியல் சுரண்டல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது. பேராதனைப் பல்கலைக்கழகம் போன்ற ஒரு நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனத்தில் ஒரு பீடாதிபதி மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளமை பல்கலைக்கழகங்களின் உள்ளக ஒழுக்காற்று முறைகளின் பலவீனத்தைக் காட்டுகிறது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட ஏனைய மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் துணிச்சலை வழங்குவதுடன், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்ற செய்தியையும் உரக்கச் சொல்லியுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இத்தகைய வழிகாட்டல்களைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

#PeradeniyaUniversity #SupremeCourtSL  #SexualHarassmentJustice #AcademicFreedom  #RightsViolation

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More