Home இலங்கைமட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி பணிப்புரை!

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி பணிப்புரை!

by admin
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலப்பரப்பை மகாவலி அதிகாரசபையினூடாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் அதிகாரிகளுக்கு அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அங்கு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20) முற்பகல் மட்டக்களப்பு பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே, பண்ணையாளர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு தீர்வாக இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட ஏனைய முக்கிய விடயங்கள்:
சூறாவளி நட்டஈடு: ‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கான நட்டஈடுகளை விரைவாக வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு: மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் தேவை குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். மேலும், நீர் வழங்கல் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாகப் பிரதேசங்களுக்குச் சென்று ஆராயுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துறைமுக அபிவிருத்தி: கிழக்கு மாகாண மீன்பிடித்தொழிலின் முக்கிய மையமான வாழைச்சேனை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் அங்கு புதிய கலங்கரை விளக்கம் (Lighthouse) ஒன்றை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஏனைய திட்டங்கள்: மாவட்டத்தின் வெள்ளக் கட்டுப்பாட்டு முன்ஆயத்தங்கள், யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான திட்டங்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More