யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள வளாகத்தினுள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்கும் சட்டப் போராட்டத்தில் மிக முக்கியமான தீர்ப்பினை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று (2026 மே 21, வியாழக்கிழமை) வழங்கவுள்ளது. பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள விகாரையின் வேலியை அகற்றுவதற்கு அனுமதிப்பதா அல்லது அதற்குத் தடை விதிப்பதா என்பது குறித்த மல்லாகம் நீதிமன்றின் இன்றைய கட்டளை, காணி உரிமையாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது. இவ்வீதியை விடுவிப்பதற்காகக் கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வீதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து விகாரை நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பிரதேச சபையே அதனை அகற்றி, அதற்கான செலவீனத்தை விகாராதிபதியிடமிருந்து அறவிடும் எனவும் பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பிரதேச சபை வேலியை அகற்ற முற்படுவதாக விகாராதிபதி செய்த முறைப்பாட்டின் பேரில், பலாலி காவல்துறையினா் தவிசாளரை அழைத்து, “வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படும்” என அச்சுறுத்தும் தொனியில் கூறி வேலியை அகற்றும் பணியைக் கைவிடுமாறு கோரினர். எனினும், தவிசாளர் அதற்கு மறுப்புத் தெரிவித்து வீதியை மீட்டே தீருவோம் என்பதில் உறுதியாக இருந்தார்.
பிரதேச சபையின் வீதி மீட்புப் பணியை முடக்கும் நோக்குடன், அதற்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிப் பலாலி காவல்துறையினா் கடந்த மே 8-ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். ஒருதலைப்பட்சமாகத் தடையுத்தரவு வழங்க முடியாது எனக் குறிப்பிட்ட மன்று, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளரை மே 11-ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்தது.
பிரதேச சபை சார்பில் கடந்த மே 11-ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பிரதேச சபைக்குரிய சட்டபூர்வ அதிகாரங்கள் மற்றும் வீதி உரிமை குறித்த வலுவான வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த மல்லாகம் நீதவான், வழக்கின் இறுதித் தீர்மானக் கட்டளையை வழங்குவதற்காக இன்றைய தினத்தை (மே 21) திகதியிட்டிருந்தார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியின் குறுக்கே உள்ள வேலி அகற்றப்படும் பட்சத்தில், தையிட்டி விகாரைக்காகத் தற்போது அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ள சில தனியார் காணிகளும் இயல்பாகவே விடுவிக்கப்படக்கூடிய ஏதுநிலை உருவாகும். இதனால், பல வருடங்களாகத் தமது பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் காணி உரிமையாளர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.
#ThayiityViharaCase #MallakamCourt #ValiNorthPradeshiyaSabha #LandRightsTamil #MA_Sumanthiran

