197
யாழ்ப்பாணம் பலாலி வீதியில், உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பகுதிக்கான பொதுமக்களின் போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பலாலி வீதியின் சுமார் 2.5 கிலோமீற்றர் நீளமான பகுதி, கடந்த பல வருடங்களாக இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து வருகிறது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க, கடந்த ஆண்டு (2025) முதல் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் இவ்வீதியினூடாகப் பயணிக்க இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது, இவ்வீதியை 24 மணி நேரப் போக்குவரத்திற்கும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் முன்வைக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு பாதுகாப்புத் தரப்பினர் அதற்கு உடனடியாக உடன்படவில்லை. எவ்வாறாயினும், மக்களின் நலன் கருதி விடுக்கப்பட்ட தொடர் அழுத்தமான கோரிக்கைகளை அடுத்து, போக்குவரத்து நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு இராணுவத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் காலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மாத்திரமே இவ்வீதியூடான போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வெசாக் தினத்தில் இருந்து இந்த நேரம் மேலும் ஒரு மணித்தியாலம் நீடிக்கப்பட்டு, காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை பொதுமக்கள் தடையின்றி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீடிப்பானது காங்கேசன்துறை, பலாலி மற்றும் பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கும் அந்தப் பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

