46
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் சொல்லிசைப் (Rap) பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தியும், இத்தகைய கொடூரமான சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் இன்றைய திகதியான திங்கட்கிழமை (ஜூன் 08, 2026) பெருமளவிலான மக்களின் பங்கேற்புடன் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீர்த்தனன், தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஒரு கலைஞனின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், சக கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்ட ஏற்பாட்டாளர்கள் சிலரை வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு அழைத்த காவற்துறையினர், போராட்டத்தைக் கைவிடுமாறு கடுமையான நெருக்கடிகளைத் தந்திருந்தனர்.
போராட்டத்தை நடத்தினால், ஏற்பாட்டாளர்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி, அவர்களிடம் வாக்குமூலங்களையும் பெற்றுக் கொண்டு காவற்துறையினர் விடுவித்திருந்தனர். எனினும், காவற்துறையின் இத்தகைய அச்சுறுத்தல்களையும் தடிகளையும் தவிடுபொடியாக்கி, கலைஞனின் விடுதலைக்காக சிவில் சமூகமும் பொதுமக்களும் வீதியில் இறங்கிப் போராடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

