41
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். இச்சந்திப்புகளின் போது, வடக்கு மாகாணப் பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மிக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மதிய வேளையில் மல்லாகம் கல்லாரை வளர்மதி சனசமூக நிலையத்திலும், மாலை வேளையில் எழுதுமட்டுவாழ் மருதங்குளம் விநாயகர் முன்பள்ளிக்கு அருகாமையிலும் பொதுமக்கள் மற்றும் பெண்களுடனான கலந்துரையாடல்கள் மிகச் சிறப்பாக இடம்பெற்றன. இச்சந்திப்புகளின் போது பெண்கள் எதிர்நோக்கும் உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் காவற்துறை (Police) மூலமாகவழங்கப்பட வேண்டிய பாதுகாப்புச் சேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
குறித்த அனைத்துக் கலந்துரையாடல்களிலும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடன் இணைந்து, கடற்தொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ச. சிறிபவானந்தராசா மற்றும் கௌரவ க. இளங்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

