Home இலங்கையாழ். மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம்: வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம்: வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு!

by admin
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இருந்து தமிழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 15) யாழ். மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி உள்நாட்டு யுத்தம் காரணமாக வலி. வடக்கு பிரதேச மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமையுடன் இந்தத் துயரம் நிகழ்ந்து 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 17ஆவது ஆண்டு நடந்து கொண்டிருக்கும் போதிலும், இன்னமும் அப்பகுதி மக்கள் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பி மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அவர்களின் விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களில் தொடர்ந்தும் காவற்துறையினரின் பாதுகாப்போடு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
“எங்கள் நிலங்களை எங்களிடம் ஒப்படைத்து, எங்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்!”
தமது பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தங்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த நியாயமான போராட்டத்திற்கு அரசியல் கட்சி பேதங்கள் இன்றி, அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு தங்களின் பேராதரவை வழங்க வேண்டும் எனவும் அக்குழுவினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More