50
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டருமான யோசித ராஜபக்ஷ இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ரோயல் கடற்படை கல்லூரியில் அவர் பெற்ற பயிற்சி மற்றும் இலங்கை கடற்படையில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்ட விதம் குறித்த தொடர் விசாரணைக்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையிலேயே, அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விரிவான விசாரணைகளின்படி, யோசித ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த முக்கிய பின்னணி விபரங்கள் வெளியாகி உள்ளன.
அடிப்படை தகைமை மீறல்: இலங்கை கடற்படையில் ‘Officer Cadet’ (அதிகாரி பயிற்சி மாணவர்) ஆக இணைவதற்கு உயர்தரத்தில் கணிதம் அல்லது அறிவியல் துறையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான விதியாகும். ஆனால், யோசித ராஜபக்ஷ கலைப்பிரிவில் பயின்றவர் என்பதால், அவருக்காக விதிகளும் விளம்பரங்களும் மாற்றியமைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது சாதாரண தர தகைமைகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ரோயல் கடற்படை கல்லூரி விவகாரம்: 2006ஆம் ஆண்டு அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, பிரிட்டிஷ் ரோயல் கடற்படை கல்லூரிக்கு யோசிதவை இணைப்பது குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு அக்கல்லூரி முழுமையான அரச உதவித்தொகை (Scholarship) வழங்க முடியாது எனவும், கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் பதிலளித்துள்ளது.
அரசு நிதி முறைகேடு: இந்த பயிற்சிக்காக இலங்கை அரசாங்கத்தின் நிதியிலிருந்து சுமார் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை, முறையான அனுமதிகளின்றி செலவிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அனுமதியற்ற வெளிநாட்டுப் பயணங்கள்: ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், கடற்படைத் தளபதியின் எவ்வித அனுமதியுமின்றி தனது தன்னிச்சையான விருப்பத்தின் பேரில் பல வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோத நியமனம் மற்றும் அரச நிதி துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கை இன்று காலை அரங்கேறியுள்ளது.
Spread the love

