40
“வீடற்றவர்களுக்கு வீடு” என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 3,600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, 2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் மற்றும் 2025ஆம் ஆண்டு பயனாளிகளுக்கான ஆவணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தில் தாய், தந்தை அல்லது துணையை இழந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், விடுபட்டவர்களின் பெயர்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என்றார். மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 3,815 வீடுகளைப் பூர்த்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இவற்றுடன், அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான 10,000 ரூபா உதவித்தொகை மற்றும் விவசாய, மீன்பிடி மானியங்களும் இந்த வருடத்தில் (2026) நடைமுறைப்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
காணியற்றவர்களுக்கு நவீன அடுக்குமாடி குடியிருப்புகள்!
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் உரையாற்றுகையில், யாழ்ப்பாணத்தில் சொந்தமாகக் காணி இல்லாத மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னதாக 10 இலட்சமாக இருந்து, பின்னர் 15 இலட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுத்திட்ட நிதியுதவி, தற்போது மேலும் 5 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 20 இலட்சம் (2 மில்லியன்) ரூபாவாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் விநியோகம்:
யாழ் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிவர்த்தி விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் தலா 2 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படும் 827 வீடுகளில், முதற்கட்டமாக 125 பயனாளிகளுக்கு தலா 4 இலட்சம் ரூபா வீதம்கொண்ட காசோலைகள் கையளிக்கப்பட்டன. அத்துடன், 2025ஆம் ஆண்டில் வீடுகளைப் பூர்த்தி செய்த 180 பயனாளிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
தீவுப் பகுதிகளுக்கு மேலதிக நிதி கோரிக்கை:
முன்னதாக நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர் (அரசாங்க அதிபர்), யாழ் மாவட்டத்திற்கு அமைச்சின் மூலம் 827 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக 281 வீடுகளும் கட்டப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினார். அத்துடன், நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற கடல் கடந்த தீவுப் பகுதிகளுக்குக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான மேலதிக போக்குவரத்துச் செலவுகளை வழங்குமாறும், 2018-2019 காலப்பகுதியில் கைவிடப்பட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய மிகுதி நிதியை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலித்து துரித நடவடிக்கை எடுப்பதாகப் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Spread the love

