Home இலங்கைவழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி -ஒலி எழுப்பும் சாதனங்களின் அதீத பயன்பாடு தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு பணிப்பு!

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி -ஒலி எழுப்பும் சாதனங்களின் அதீத பயன்பாடு தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு பணிப்பு!

by admin
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி மற்றும் ஒலி எழுப்பும் சாதனங்களின் அதீத பயன்பாடு தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், அதிக ஒலியால் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் கடுமையான இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியில் முன்னணியில் திகழும் மாவட்டமாகக் கருதப்படும் நிலையில், புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான கற்றல் காலங்களிலும், பரீட்சை நடைபெறும் நேரங்களிலும் ஒலி மாசு மாணவர்களின் கவனச்சிதறலுக்கும் கல்விச் செயல்திறன் குறைவுக்கும் காரணமாக அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் வசிக்கும் முதியோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் சிறுவர் ஆகியோரின் உடல் மற்றும் மனநலத்திற்கும் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதான வீதிகளோரம் அமைந்துள்ள சில வழிபாட்டுத் தலங்களில் இருந்து எழும் அதிக சத்தம், வாகன ஓட்டுநர்களின் கவனச்சிதறலால் விபத்துகளுக்கும் வழிவகுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குவதில் வழிபாட்டுத் தலங்களுக்கு முக்கிய தார்மீகப் பொறுப்பு உள்ளதாகவும், மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலுடன் சமூக நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் மாவட்ட செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சில இடங்களில் இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகமான அதிருப்தி மற்றும் கவலை நிலவி வருவதாகவும், தேவையான சந்தர்ப்பங்களில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகத்தை போதிக்கும் நிலையங்கள் மனிதாபிமானத்துடனும் சமூக ஒற்றுமையுடனும் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More