Home இலங்கைவடக்கில் இவ்வாண்டு 15,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை முன்னெடுப்பு!

வடக்கில் இவ்வாண்டு 15,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை முன்னெடுப்பு!

by admin
வடக்கு மாகாணத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டும் சுமார் 15,000 ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். வசீகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான கருத்தடைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் ஏற்கனவே தயாராக கையிருப்பில் உள்ளதாகவும், கடந்த ஆண்டுகளை விட இம்முறை பெண் நாய்களுடன் இணைந்து ஆண் நாய்களுக்கும் ஒரேநேரத்தில் கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களமும் தனித்துவமான கருத்தடைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதால், இரண்டு திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பிரதேசங்களைப் பகிர்ந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் திட்டம் விரிவாகவும் திறம்படவும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சில பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததால், இம்முறை சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னரே அடுத்த மாதம் முதல் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாய்களைப் பிடிக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட இந்த திட்டத்தில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம், தெருநாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கத்தால் உருவாகும் சுகாதார மற்றும் பாதுகாப்பு சவால்களை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More