Home இலங்கைசெம்மணி மனிதப் புதைகுழியில் 412 என்புக்கூடுகள் அடையாளம்: நேர்சீரின்றி குவியலாகக் காணப்படும் அதிர்ச்சிப் பின்னணி!

செம்மணி மனிதப் புதைகுழியில் 412 என்புக்கூடுகள் அடையாளம்: நேர்சீரின்றி குவியலாகக் காணப்படும் அதிர்ச்சிப் பின்னணி!

by admin
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 31ஆம் நாள் பணிகள், நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற மேற்பார்வையில் காவற்துறையினரின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய தின அகழ்வாய்வின் போது மேலும் 13 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் போது 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தொல்லியல் மற்றும் மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போதைய அகழ்வின் போது 3 என்புக்கூடுகள் ஒரே நேர்க்கோட்டிலும், 09 என்புக்கூடுகள் எவ்வித ஒழுங்குமுறையுமின்றி நேர்சீரின்றி குவியலாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மிக அவதானமாகச் சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பிலான சட்டத்தரணி ஞா.ரனித்தா அவர்கள், “மனித என்புகளை அகழ்ந்தெடுப்பதும், மரபணு (DNA) பரிசோதனை செய்வதும் இரு வேறுபட்ட கட்டங்களாகும். முதற்கட்டமாக என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் மூலமே உயிரிழந்தவர்களின் பால், வயது மற்றும் மரணத்திற்கான காரணம் போன்ற மேலதிக விபரங்கள் கண்டறியப்படும்” என்று விளக்கமளித்தார்.
மேலும், “தொல்லியல் நிபுணர்களால் இந்த என்புகளின் காலம் துல்லியமாகக் கணிக்கப்பட்ட பின்னரே, தங்களின் உறவினர்களைத் தேடிவரும் குடும்பத்தினரின் மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். தற்போதைய நிலையில், முன்னதாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரிகளைச் சேகரித்து வைப்பதற்கான சட்டப்பூர்வ அல்லது தொழில்நுட்ப வசதிகள் எவையும் காணப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பல தசாப்தங்களாகத் தங்களின் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தவிக்கும் தமிழ் மக்களுக்கு, இந்தச் செம்மணி அகழ்வாய்வுப் பணிகள் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More