50
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிநவீன “கத் லாப்” (Cath Lab) ஆய்வுகூடப் பிரிவு சனிக்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அதிநவீன வசதியை வடமாகாண மக்களின் பயன்பாட்டிற்காக நாடா வெட்டி திறந்து வைத்தார். இதய நோய்களை மிகத்துல்லியமாகக் கண்டறியவும், சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஏதுமின்றி நவீன முறையில் இதய நோய்களைக் குணப்படுத்தவும் இந்த “கத் லாப்” பரிசோதனைக்கூடம் பெரிதும் உதவவுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் பெருமளவிலான பணத்தைச் செலவழித்து மேற்கொள்ளப்படும் இத்தகைய சிகிச்சைகளை, இனிவரும் காலங்களில் வடமாகாண மக்கள் தமது பிரதேசத்திலேயே இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் மிக முக்கிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த உயர்மட்ட நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ச. சிறிபவனந்தராசா, க. இளங்குமரன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
தீக்கிரையான மருந்து களஞ்சியசாலை நேரில் ஆய்வு:
கத் லாப் திறப்பு விழாவைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 09ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசமான யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையையும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளைக் கேட்டறிந்தார். இந்தத் தீ விபத்தின் போது, புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில் கருகி அழிந்திருந்தன.
இந்த விபத்துத் தொடர்பில் காவற்துறையினரின் (Police) விசாரணைகள் மற்றும் திணைக்கள மட்டத்திலான விசாரணைகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையின் மருந்து விநியோகத்தை சீரமைக்கவும், புதிய நவீன மருந்து களஞ்சியசாலையொன்றை மிக விரைவில் அமைப்பதற்கும் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது உத்தரவிட்டார்.
Spread the love

