48
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையின் கீழ், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவனந்தராசா, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிராந்திய முக்கிய அதிகாரிகள் மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிநவீன 3 மாடிக் கட்டிடம் மற்றும் நிதி ஒதுக்கீடு:
கடந்த காலங்களில் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் (NPD) அனுமதி தாமதமானதால் இழுபறியிலிருந்த தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடிக் கட்டிடக் கட்டுமானப் பணிகளுக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இவ்வாண்டுக்கான பட்ஜெட்டில் இதற்கென முதற்கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டே ஆரம்பித்து 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்து கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். புதிய கட்டிடம் திறக்கப்படும் போது அதிநவீன மருத்துவ உபகரணங்களும், போதிய பணியாளர்களும் வழங்கப்படும் என்றும், அதற்கான கொள்வனவு (Procurement) பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது மற்றும் தரம் உயர்த்துதல்:
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் (Line Ministry) கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மாகாண சபையின் கீழ் வைத்திருப்பது, புற்றுநோய் பிரிவை மட்டும் மத்திய அரசு ஏற்பது அல்லது முழு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவது ஆகிய மூன்று விருப்பங்கள் (Options) குறித்து ஆராய அமைச்சினூடாக விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. வெறும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாலோ அல்லது பெயர் பலகையை ‘DGH’ (மாவட்ட பொது வைத்தியசாலை) என மாற்றுவதாலோ மட்டும் உண்மையான அபிவிருத்தியை எட்ட முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் உள்கட்டமைப்பு இடைவெளிகள் காரணமாக உடனடியாக இதனை மாவட்ட பொது வைத்திய சாலையாகத் தரம் உயர்த்த சாத்தியக் கூறுகள் இல்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவிப்பதாகக் கூறினார்.
துறைசார் பணியாளர் பற்றாக்குறைக்கான தீர்வுகள்:
நாடு தழுவிய ரீதியில் சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு, கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளால் பெருமளவிலானோர் வெளிநாடுகளுக்குச் சென்றதே முக்கிய காரணம் என விவரித்த அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளுக்கான பணியாளர் விபர ஒப்புதல் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளதால், வரும் அக்டோபர் மாதத்திற்குள் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்றார்.
மேலும், ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் (2030ஆம் ஆண்டிற்குள்) பட்டதாரிகளுடன் சேர்த்து மொத்தம் 13,600 தாதியர்களைச் சேவையில் இணைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்காக இந்த மாதத்தில் மட்டும் 3,000 மாணவர்களைத் தாதியர் பயிற்சிப் பள்ளிகளில் (NTS) சேர்ப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள 1,989 கீழ் நிலை ஊழியர்களும் மத்திய அமைச்சின் கீழ் விரைவில் இணைக்கப்படவுள்ளனர்.
அரசியல் இலாபம் தேட வேண்டாம் – கடற்றொழில் அமைச்சர்:
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வளக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைப் பணியாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதார சேவை என்பது அரசியல் மேடையல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் உன்னத சேவை என்பதால், வைத்தியசாலையை மையமாகக் கொண்டு சிலர் அரசியல் இலாபம் தேட முயல்வதைக் கைவிட்டு, இதன் அபிவிருத்திக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
Spread the love

