32
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிர குற்றப்பின்னணி கொண்ட இருவர், மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு ஊடுருவிய நிலையில், ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வட்டாலை பகுதியைச் சேர்ந்த லூஸிநந்த் (30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (31) ஆகிய இருவரும் நேற்று இரவு மன்னாரிலிருந்து இலங்கை ரூபாய் 3 லட்சம் செலுத்தி, படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்திறங்கியுள்ளனர்.
தகவலறிந்த மரைன் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் தலைமையிலான காவற்துறையினர் இருவரையும் கைது செய்து, ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மத்திய மற்றும் மாநில உளவுத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மெத்தபெட்டமைன், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்குகளும், கொலை மற்றும் கொள்ளை வழக்குகளும் இலங்கையில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக ஊடுருவியதற்காக பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவிருந்த நிலையில், இவர்கள் மீதான குற்றப்பின்னணி காரணமாக கியூ பிரிவு காவற்துறையினர் இருவரையும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ‘சாகர் கவாச்’ என்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரும் சூழலில், குற்றப்பின்னணி கொண்ட இருவர் கடல்வழியாக ஊடுருவிய சம்பவம் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

