Home உலகம்அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி: பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் தீவிரத் தாக்குதல்!

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி: பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் தீவிரத் தாக்குதல்!

by admin
ஹார்முஸ் நீரிணையில் பயணித்த வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (CENTCOM) ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அரண்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அண்மையில் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து கூட்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் புதன்கிழமை (ஜூலை 08, 2026) நடத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள அலி அல் சலேம் (Ali Al Salem) விமானப்படைத் தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைத் தலைமையகம் (Fifth Fleet) உள்ளிட்ட முக்கிய அமெரிக்க இராணுவ நிலைகளே ஈரானின் இலக்குகளாக அமைந்தன.
இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் (Air raid sirens) ஒலிக்கவிடப்பட்டன. ஈரானில் இருந்து வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக எதிர்கொண்டு தடுத்து அழித்ததாகக் குவைத் காவற்துறை மற்றும் இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானிய இராணுவம், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களும் தங்களின் ட்ரோன் தாக்குதல்களுக்குரிய இலக்குகளாக மாறும் என எச்சரித்துள்ளது. இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More