35
நியூசிலாந்தில் குடியேற்றத் தொழிலாளி ஒருவரைக் கடுமையான முறையில் சுரண்டிய குற்றத்திற்காக, அங்குள்ள கணினி நிறுவனம் ஒன்றின் இலங்கை பெண் இயக்குநருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ‘கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ் 24 கேர் லிமிடெட்’ (Computer Express 24 Care Ltd) என்ற நிறுவனத்தை வழிநடத்தி வந்த இவர், தொழிலாளர் சுரண்டல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதனைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 12 மாத கால வீட்டுக்காவல் தண்டனையாக (Home Detention) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடாக 59,657 நியூசிலாந்து டொலர்களை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையில், தொழிலாளிக்கு வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட ஊதியம் மற்றும் அவரிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட 15,000 நியூசிலாந்து டொலர்கள் ஆகியன அடங்கும். இச்சம்பவம் அதிகாரத்தை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளதாக நியூசிலாந்து குடியேற்றத்துறை (Immigration New Zealand) தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடியேற்றத் தொழிலாளர்களைச் சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராகக் காவற்துறையினரும் குடியேற்றத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Spread the love

