செம்மணி மனிதப் புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக் கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 56 நாட்கள் அனுமதிக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வகழ்வுப் பணியின் 39ஆவது நாளான இன்று, அருகருகே இரண்டு சிறுவர்களின் என்புக் கூடுகள் உட்பட மொத்தம் 13 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் சில என்புகள் குவியலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சில என்புக் கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி ஞா.ரனித்தா:
“குவியலாகக் காணப்பட்ட என்புக் குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுகின்றன. எனினும், முறையான ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பான மேலதிகமான மற்றும் துல்லியமான தகவல்களைக் கூற முடியும்.”
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக் கூடுகளில், 03 சிறுவர்களின் என்புக் கூடுகள் உள்ளடங்கலாக மொத்தம் 04 என்புக் கூடுகள் இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் அடங்கலாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட 93 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 467 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 444 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#Semmani #SemmaniMassGrave #Jaffna #NorthernProvince #SriLanka #MassGrave #HumanRights #Srilankatoday

