Home இந்தியா26 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின் சோனம் வாங்சுக் நிறைவு  

26 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின் சோனம் வாங்சுக் நிறைவு  

by admin
இந்திய கல்வி ஆர்வலரும் சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்தின் ஒரு பகுமாக மேற்கொண்ட 26 நாள் உண்ணாவிரதத்தை வியாழக்கிழமை (ஜூலை 23) இரவு குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் நிறைவு செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில், தனது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ அருகிலிருக்க, சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். இந்த 26 நாட்களில் அவர் 11 கிலோகிராமுக்கும் அதிகமான எடையை இழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
2026 ஜூன் 28ஆம் திகதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் வாங்சுக் இணைந்தார். இந்தப் போராட்டம், நீட், சிஏஇடி, சிபிஎஸ்இ போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் தொடர்பானது, குறிப்பாக நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்தது என குற்றம்சாட்டப்பட்டது. போராட்டக்காரர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி வந்தனர்.
ஜூலை 18ஆம் திகதி காவல்துறையினரால் ஜந்தர் மந்தரில் இருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், டெல்லி உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வு முதலில் இந்த மாற்றத்திற்கு அனுமதி மறுத்தது; பின்னர் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய மற்றும் நீதிபதி தேஜாஸ் காரியா அடங்கிய அமர்வு மேல்முறையீட்டை ஏற்று மேதாந்தாவுக்கு மாற்ற அனுமதி வழங்கியது. மேதாந்தாவில் அவர் ஐசியு 8-ல் டாக்டர் சுஷீலா கடாரியா மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்தார்.
விரதத்தை முடிக்க வைத்த நிபந்தனைகள்
ஜூலை 22ஆம் திகதி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், மூன்று நிபந்தனைகளை வாங்சுக் முன்வைத்தார்: நீட்-யுஜி வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு; தேர்வு முறைகேடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக பாராளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதம் (கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்த பரிசீலனை உள்ளிட்டது); மற்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது என்ற எழுத்துபூர்வ உறுதிமொழி.
ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற அணிவகுப்பில் அல்லது ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்தது. நீட் விண்ணப்பதாரர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்தும் பாராளுமன்றத்தில் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிப்பது குறித்தும் அரசு உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையை வாங்சுக் இறுதியில் வலியுறுத்தவில்லை.
தலைவர்களின் எதிர்வினை
“நான் என் விரதத்தை முடித்ததில் நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நன்றி” என வாங்சுக் தெரிவித்தார். 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தன்னைச் சந்தித்ததாகவும் அல்லது கடிதங்களில் கையெழுத்திட்டதாகவும், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் நாட்டில் வன்முறை அதிகரிக்கும் அபாயம் கருதியும் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, வாங்சுக் விரைவில் குணமடைய வேண்டும் எனவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து பழைய எடையை மீண்டும் பெற வேண்டும் எனவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் தமது சமூக ஊடக பதிவில் தெரிவித்தார்.
எனினும், போராட்டத்தை முன்னெடுத்த காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் டிப்கே, கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை ஜந்தர் மந்தரில் தமது அமைதியான போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More