கிளிநொச்சி, அக்கராயன் காவல் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் சுமார் 29 ஏக்கர் வனப்பகுதியைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, ஆக்கிரமிக்க முயன்ற பிரதான சந்தேகநபர் உட்பட 9 பேரைக் காவற்துறை விசேட அதிரடிப்படையினரும் (STF) வனப்பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடிச் நடவடிக்கையின் போது கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் குழப்ப நிலைமைகளைக் கட்டுப்படுத்தக் காவற்துறையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைத் (Warning Shots) தீர்த்ததுடன், கைது செய்யப்பட்டவர்களில் 8 பேரை நாளை செவ்வாய்க்கிழமை (2026 ஜூலை 28) வரை விளக்கமறியலில் (Remand) வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு முதல் கண்ணகிபுரம் வனப்பகுதியில் 29 ஏக்கர் காட்டினை அழித்து, அப்பகுதியில் கற்றாழைத் தோட்டங்கள் (Aloe Vera Farms), பண்ணைகள் மற்றும் அனுமதியற்ற கட்டடங்களை நிர்மாணித்து ஆடைத் தொழிற்சாலை (Garment Factory) ஒன்றினை உருவாக்கப் பிரதான சந்தேகநபர் முயன்று வந்துள்ளார். கட்டடங்கள் மற்றும் பண்ணைகளுக்குக் கரைச்சி பிரதேச சபை உள்ளிட்ட எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதிகளும் பெறப்படவில்லை.
வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் இவருக்கு எதிராக ஏற்கனவே 06 குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றில் நிலுவையிலுள்ளன. கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்தவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த ஜூலை 14ஆம் திகதி நீதிமன்றினால் பிடியாணையும் (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் மற்றும் காவற்துறையினரின் வாகனங்கள் பிராந்தியத்திற்குள் நுழைவதைக் கண்காணித்துத் தகவல் வழங்குவதற்காகச் சம்பள அடிப்படையில் ஆட்களைப் பணியில் அமர்த்தி, அதிகாரிகள் வரும்போது தப்பியோடுவதை இக் கும்பல் வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதனை முறியடிக்க வனப்பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் ‘ட்ரோன்’ (Drone) கேமராக்களைப் பறக்கவிட்டுத் தடையங்களை நிழற்படங்களாகவும் காணொளிகளாகவும் திரட்டினர். பின்னர், உத்தியோகபூர்வ வாகனங்களைத் தவிர்த்து, வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களில் விசேட அதிரடிப்படையினருடன் அதிரடியாகச் சென்று காடழிப்பில் ஈடுபட்டவர்களைச் சுற்றி வளைத்தனர்.
அதிரடிப்படையினரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கும்பல், வெடிகளைக் கொளுத்திப் பகுதியிலிருந்த மக்களைத் திரட்ட முயன்றதுடன் அதிகாரிகளுடன் கடுமையான கைகலப்பிலும் ஈடுபட்டது. நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேலதிகக் காவற்துறையினர் வரவழைக்கப்பட்டு, வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுச் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்லும்போது மக்கள் ஒன்று திரண்டு தர்க்கத்தில் ஈடுபட்ட போதிலும், மீண்டும் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு 9 பேர் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 8 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நாளை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பை (Identification Parade) நடத்துவற்கும் திகதியிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, “குறித்த ஆடைத் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்குள் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் நுழையக் கூடாது எனவும், விவசாயச் செயற்பாடுகளைக் குழப்பக் கூடாது எனவும் மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவு நிலுவையிலுள்ளது” என மன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அதேவேளை, குறித்த தொழிற்சாலை மற்றும் பண்ணையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இவ்வாறான நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். வனவளங்களையும் காட்டு நிலங்களையும் பாதுகாப்பது வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் உன்னதக் கடமையாகும் அதேவேளை, சட்டரீதியான நடவடிக்கைகளின் ஊடாகச் சுற்றாடலைப் பாதுகாப்பதன் அவசியத்தைச் சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது.
#KilinochchiDeforestationArrest #KannakipuramForestEncroachment #STFWarningShotsKilinochchi #DroneSurveillanceForestDepartment #NorthernProvinceEnvironmentalRights

