யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். விண்ணப்பித்தவர்களில் திறமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காகன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்ற போதே இவ்வாறு 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும் வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும் பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் துணைவேந்தரும் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் முன்மொழியப்பட்டுள்ளனர்.
முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் திறமைப் பட்டியல், பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, நாளைய தினம் (13) அனுப்பி வைக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் #துணைவேந்தர் #முன்மொழிவு