நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட பிரதமர் நினைவு பலகையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையமான தம்பபவனி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் வகையில் காற்றாடிகள் செயற்படுத்தப்பட்டன.
மன்னார் முதல் நடுகுடா வரையான 30 கிலோமீற்றர் அடி சக்தி பரிமாற்ற அமைப்புடனான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நடுகுடா முதல் அநுராதபுரம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முழு மின் கட்டமைப்பிற்கும் 103.5 மெகாவொட் திறன் இணைக்கப்படவுள்ளது.
மன்னார் கடற்கரையில் 13 கிலோமீற்றர் தூரத்திற்கு, 150 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையிலான இந்த தம்பபவனி காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, இதுவரை அமைக்கப்பட்ட மிகப்பாரிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது #மன்னார் #தம்பபவனி #காற்றாலைமின்உற்பத்திநிலையம் #திறந்துவைப்பு