Home இலங்கைஇலங்கையில் கால்பதிக்கும் சர்வதேச சைபர் குற்றக் கும்பல்கள்

இலங்கையில் கால்பதிக்கும் சர்வதேச சைபர் குற்றக் கும்பல்கள்

by admin

இலங்கையில் தங்கியிருந்து கொண்டு சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 37 சீனப் பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றைய தினம் (04) இரவு இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வெளியேற்றப்பட்டதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மியான்மார், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளில் இயங்கி வந்த பாரிய சைபர் குற்றக் கும்பல்கள், தற்போது இலங்கையைத் தமது புதிய தளமாக மாற்றி வருகின்றனவா என்ற அச்சம் எழுந்துள்ளது. அண்மைக் காலங்களில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

 துபாய் மற்றும் அஜ்மான் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கடும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, சீனக் குற்றக் கும்பல்கள் ஆசியப் பிராந்தியத்தில் மாற்று இடங்களைத் தேடி வருகின்றன. இலங்கையின் வேலைவாய்ப்பு இணையதளங்களில் க.பொ.த (சாதாரண தரம்) தகைமையுடன், அடிப்படை கணினி அறிவுள்ளவர்களுக்கு 100,000 ரூபாவிற்கும் அதிக சம்பளம் தருவதாகக் கூறி வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவை மியான்மார் மற்றும் துபாயில் பயன்படுத்தப்பட்ட அதே பாணியிலான ஏமாற்று வேலைகள் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக காவல்துறையினா் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில் 157 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜகிரிய மற்றும் மெதவெலிகடவில் 120 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

தலங்கம – வலன ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்கவில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி 24 மில்லியன் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கடத்தி வர முயன்ற 9 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

மியான்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண் ஒருவர் வழங்கிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:

“ஆரம்பத்தில் நிலைமைகள் சாதாரணமாகத் தோன்றும். ஆனால், சில காலம் சென்றதும் சம்பளம் நிறுத்தப்படும், சித்திரவதைகள் ஆரம்பமாகும். மின்சார அதிர்ச்சி அளித்தல், தனி அறையில் அடைத்து வைத்தல் போன்ற கொடுமைகள் நடக்கும். இலங்கை இளைஞர்கள் தமது தொழில்நுட்ப அறிவினால் இவ்வாறான கும்பல்களால் இலகுவாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது,” என அவர் எச்சரித்துள்ளார்.

பத்தரமுல்ல போன்ற முக்கிய பகுதிகளில் இவ்வாறான சைபர் குற்ற மையங்கள் இயங்குவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது, அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#இலங்கை #சைபர்குற்றம் #சீனப்பிரஜைகள் #நாடுகடத்தல் #மியான்மார் #துபாய் #வேலைவாய்ப்புமோசடி #காவற்துறை #CyberCrimeSL #Deportation #OnlineFraud #SriLankaNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More