57
இலங்கை உள்நாட்டு வருமானவரித் திணைக்கள (IRD) சட்டத்தின்படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்துக் குடிமக்களும் வரி அடையாள எண்ணை (TIN) பெற்றுக்கொள்வது சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது நாட்டுக்கான கடமை மட்டுமன்றி, ஒவ்வொரு தனிநபரின் பொறுப்புமாகும் என வருமானவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இதுவரை இந்த TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டு வருமானவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அவசர அறிவித்தலின்படி (Notice No. SEC/PN/APIT/2026-02), அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் TIN இலக்கத்தைப் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஊழியர்களின் வரிக்குட்பட்ட மற்றும் வரிக்குட்படாத அனைத்துச் சம்பள விபரங்களையும் அவர்களின் TIN இலக்கத்துடன் இணைத்தே வருமானவரித் திணைக்களத்திற்கு நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஊழியர்கள் TIN இலக்கத்தை வழங்கத் தவறும்பட்சத்தில், அது நிறுவனத்திற்கும் தனிநபருக்கும் கடுமையான அபராதங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, அனைத்து தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தாமதமின்றி உடனடியாகத் தங்களது TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கான பதிவுச் சான்றிதழை (Certificate of Registration) தத்தமது நிறுவனங்களின் மனிதவள (HR) பிரிவினரிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு குறிப்பிட்ட திகதிக்குள் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறும் ஊழியர்களின் சம்பளத்தை, அடுத்தடுத்து வரும் மாதங்களில் தற்காலிகமாக நிறுத்திவைக்க நிறுவனங்கள் தள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு அவசர அறிவித்தலாகக் கருதி, ஊழியர்கள் அனைவரும் போதிய கால அவகாசத்திற்குள் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.
Spread the love

