68
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முதன்மைச் சந்தேகநபராகக் கருதப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தற்போது 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றுமொரு தொடர் கொலை வழக்கிலும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் முன்னாள் காவற்துறை உத்தியோகத்தர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடி காவற்துறைப் பிரிவின் பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் கன்னங்குடா பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய 5 தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் கொலைகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில், ஏனைய இரு சந்தேகநபர்களும் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையின் கீழ், அவர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை வரும் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இக்கொலைச் சம்பவங்களின் பின்னணியில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) தொடர்பிருப்பதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதை அடுத்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணைத் திகதியன்று பிள்ளையானை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார். இதுமட்டுமன்றி, 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் பிள்ளையான் தரப்புக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

