68
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் மரணத்திற்கான இறுதி நீதிச் செயல்முறைகள் நிறைவுக்கு வந்துள்ளன. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தினால் (High Court) வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி, உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, யாழ்ப்பாணம் ‘திரயல் பார் வன்’ (Trial-at-Bar) தீர்ப்பாயத்தினால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பால் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், இருவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்ததுடன், ஏனைய ஐந்து கைதிகளினதும் மரண தண்டனையை உறுதி செய்து அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து கைதிகளில் ஒருவர் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு ஏற்கனவே உயிரிழந்திருந்தார். எஞ்சிய நால்வரின் தண்டனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் 25ஆம் திகதி நால்வரில் மேலும் ஒருவர் சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கு, திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், சிறையிலுள்ள எஞ்சிய மூன்று குற்றவாளிகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அதேவேளை, உச்ச நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்து உத்தரவிட்டது. இத்துடன், இலங்கையையே உலுக்கிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் சட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
Spread the love

