Home இலங்கைசெம்மணி புதைகுழி அகழ்வுப் பணி: மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு;

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி: மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு;

 நீதி அமைச்சர் தலைமையிலான குழுவின் விஜயத்திற்கு நீதிமன்ற அனுமதி கோரல்!

by admin
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டப் பணிகளின் 26ஆம் நாள் அகழ்வுகள் இன்றைய திகதி செவ்வாய்க்கிழமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, இரண்டு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் உட்பட மேலும் 6 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 6 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், சான்றுப் பொருட்களாக இரண்டு நாணயங்கள் ஒட்டிய நிலையில் என்புக்கூடொன்றின் இடுப்புப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த விசேட குழுவினர் அகழ்வாய்வுத் தளத்திற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியைக் கோரி, இன்றைய திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், “தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில், நாளைய திகதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது நீதி அமைச்சரின் குழுவிற்கான அனுமதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார். இந்த அமைச்சர் குழுவோடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) விசேட பிரதிநிதிகள் குழுவொன்றும் இணைந்து கொள்ளவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More