51
யாழ்ப்பாணத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண்மையை நேசிப்போம்’ எனும் தொனிப்பொருளிலான விசேட நிகழ்வும், திணைக்கள மட்ட உத்தியோகத்தர்களுடனான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘பெண்மையை நேசிப்போம்’ விசேட விழா!
வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் (கலாசார மண்டபம்) நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமை தாங்கினார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமதி சிவானி சண்முகதாஸ் ‘பொருளாதார விடுதலையே பெண்களின் அதிகாரம்: நெருக்கடியான சூழலில் உரிமை, சமத்துவம், நீதியை வலுவூட்டுதல்’ என்ற பொருளில் விசேட உரையாற்றினார். சாதனை படைத்த பெண்களுக்குப் பாராட்டு கௌரவங்கள் வழங்கப்பட்டதோடு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
திணைக்கள மட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடனான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் காவற்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சரின் முக்கிய அறிவிப்புகளும் திட்டங்களும்
இங்கு உரையாற்றிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேகப் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனம் கண்டு அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு திருத்தம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடைபெற்ற பின்னர் பேசுவதை விட, அவை நடப்பதற்கு முன்னர் கண்காணிப்புகளை மேற்கொள்வது அவசியமானது என்றும், மகளிர் சங்கங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த “பெண்கள் சந்தை” திட்டம் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர் நன்னடத்தை திணைக்களத்துடனான கலந்துரையாடல்!
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு விசேட கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கான பிரத்தியேகப் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுடைய சிறுவர்களுக்கான அரச இல்லங்கள் இல்லாமை குறித்து மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், சட்டத் திருத்தங்களுக்காக 9 மாகாணங்களினதும் ஒருங்கிணைந்த முன்மொழிவுகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் முதன்முறையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட ‘நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான கையேடு’ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள முதலாவது தமிழ்ப் பெண் அமைச்சர்!
இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முதலாவது தமிழ்ப் பெண் அமைச்சர் என்ற பெருமையை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெற்றுள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும், ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் மூலம் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க உழைப்போம் என்றும், பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
சமூக ஊடகங்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு
தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மலையகத் தோட்டம், ஆடைத்தொழிற்சாலை மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மூலம் நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்கள் பெண்களே என்று சுட்டிக்காட்டினார். தற்காலத்தில் வருமான நோக்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்திப் பிழையான கருத்துக்களைப் பரப்புபவர்கள் மீது விரைவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Spread the love

