63
யாழ்ப்பாணம், பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள தங்களின் சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 3ஆவது வாரமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. பலாலி சந்திப் பகுதியில் இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த அமைதி வழிப் போராட்டம் இடம்பெற்றது. “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணை எங்களிடம் ஒப்படை” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
காவற்துறையினரின் அதிரடித் தடை:
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அந்த இடத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றினை அமைக்க முற்பட்டனர். எனினும், அங்கு வந்த பலாலி காவல் நிலையக் காவற்துறையினர் கொட்டகை அமைப்பதற்கு கடுமையான தடை விதித்தனர். “வடக்கு மாகாணத்தில் கொட்டகை அமைத்துப் போராட அனுமதித்தால், தென்னிலங்கையிலும் கொட்டகை அமைத்துப் போராடத் தொடங்கி விடுவார்கள்; எனவே அதற்கு அனுமதிக்க முடியாது” என காவற்துறையினர் வினோதமான காரணத்தைக் கூறி மக்களைத் தடுத்து நிறுத்தினர்.
காவற்துறையினரின் இந்தச் செயலால் அப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
நீண்டகாலமாகத் தொடரும் தங்களது சொந்த நிலங்களுக்கான போராட்டத்திற்குத் தகுந்த தீர்வு கிடைக்கும் வரை, இந்த அறவழிப் போராட்டம் ஓயாது எனப் பாதிக்கப்பட்ட மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
Spread the love

