56
நெடுந்தீவு பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திப் பணிகளுக்காக தற்போதைய அரசாங்கத்தினால் 1,500 மில்லியன் முதல் 2,000 மில்லியன் ரூபா வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேட அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவையாக இருந்த எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வாக, புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. எவ்வித இலாப நோக்கமுமின்றி இலங்கை கனிப்பொருள் எண்ணெய்க் கூட்டுத்தாபனம் இத்திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் செப்ரெம்பர் மாத நடுப்பகுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து மக்களிடம் கையளிக்குமாறு ஒப்பந்தக்காரர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இப்பணிகளுக்கு கடற்படையினரும் பிரதேச செயலகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, நெடுந்தீவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்றினைப் பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் இணைந்து பயனாளியிடம் வீட்டின் சாவியைச் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைத்தனர். அத்துடன், வீட்டுத்திட்டத்தின் அடுத்த கட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட வீடமைப்பு நிதிக்கான காசோலைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கடந்த 20 மாத காலத்திற்குள் ஊழல் மற்றும் இனவாதத்திற்கு எதிராகப் பாரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எஞ்சியுள்ள 40 மாத காலத்திற்குள் நாடு முழுவதையும் உள்ளடக்கிய பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே 75 வருடங்களுக்கும் மேலாக அரசியல்வாதிகள் ஏற்படுத்திய முரண்பாடுகளால் இரத்த ஆறு ஓடியது. மீண்டும் அவ்வாறானதொரு சூழல் ஏற்படுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாம் வாக்குகளை நோக்கமாகக் கொண்டு இங்கு வரவில்லை; நெடுந்தீவு மக்களின் கல்வி, சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதே எமது முக்கிய நோக்கம்” எனக் குறிப்பிட்டார்.
Spread the love

