42
இலங்கையின் முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமாரவை (Jagath Pushpakumara), இலஞ்சம் அல்லது ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (08) கைது செய்துள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குமாறு அழைக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை விசாரணைக்கு ஆஜரானதையடுத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, 2013, 2014 மற்றும் 2015 காலப்பகுதிகளில் அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை, முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் தேர்தல் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்காக போஸ்டர்கள், சேலைகள் மற்றும் டி-ஷர்ட்களை பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால் பல மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜகத் புஷ்பகுமாரவை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Spread the love

