Home உலகம்இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: ஒக்டோபர் 27-இல் பொதுத் தேர்தல்!

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: ஒக்டோபர் 27-இல் பொதுத் தேர்தல்!

சர்ச்சை மசோதாக்களுக்கு மத்தியில் தேர்தல் களம் சூடுபிடிப்பு!

by admin
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசின் நான்கு ஆண்டுக் கால ஆட்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட் (Knesset) நேற்று (ஜூலை 17) அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த பொதுத் தேர்தல் 2026 அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக, நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு நீண்ட நேர அமர்வுகள் மூலம் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை அவசரமாக நிறைவேற்றியது. அவற்றில், தீவிர மதப்பற்றுள்ள (Ultra-Orthodox) யூத ஆண்களுக்கு இராணுவச் சேவையிலிருந்து விலக்கு வழங்கும் ஏற்பாடுகள் மற்றும் அரசின் ஊடகக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் சட்டங்கள், அத்துடன் தலைமை சட்ட அதிகாரியின் (Attorney General) அதிகாரங்களை குறைக்கும் நீதித்துறைச் சீர்திருத்த மசோதாக்கள் முக்கியமானவையாகும்.
இந்தச் சட்டங்களுக்கு எதிராக தலைமை சட்ட அதிகாரி காலி பஹராவ்-மியாரா உள்ளிட்ட பல தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், ஆளும் கூட்டணியினர் அவற்றை நிறைவேற்றியுள்ளனர்.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நீடித்து வரும் நிலையில், நெதன்யாகு தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையான தேர்தல் சவாலை எதிர்கொண்டு வருகிறார். கருத்துக் கணிப்புகளில் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை முன்னிட்டு அவைத்தலைவர் அமீர் ஓஹானா, “நான்கு ஆண்டுக் கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். ஒன்பது வரவு-செலவுத் திட்டங்களையும், நூற்றுக்கணக்கான மசோதாக்களையும் நிறைவேற்றியுள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசியல் வரலாற்றில் ஒரு அரசு முழு நான்கு ஆண்டுப் பதவிக்காலத்தை நிறைவு செய்வது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, முழுமையான பதவிக்காலத்தை நிறைவு செய்த நாடாளுமன்ற ஆட்சி 1988 ஆம் ஆண்டில்தான் இருந்தது. நெதன்யாகு, இஸ்ரேல் வரலாற்றில் அதிக காலம் பிரதமராகப் பதவி வகித்த அரசியல் தலைவராகவும் பதிவாகியுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More