Home இலங்கை“இராணுவத்தினரின் காணிகள் அல்ல, விடுவிப்பது மக்களின் சொந்தக் காணிகளையே!” – ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களிடம் வடக்கு ஆளுநர்  

“இராணுவத்தினரின் காணிகள் அல்ல, விடுவிப்பது மக்களின் சொந்தக் காணிகளையே!” – ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களிடம் வடக்கு ஆளுநர்  

by admin

 

விடுவிப்பது இராணுவத்தினரின் காணிகளை அல்ல, அந்த மக்களின் சொந்தக் காணிகளையே என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன்:

“போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.”

வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள், அபிவிருத்திப் பணிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு வருகை தந்த இத்தூதுக்குழுவினரிடம், வனவளத் திணைக்களம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆளுநர் தெளிவுபடுத்தினார்.

மேலும், மாகாண சபைத் தேர்தல்கள், செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக வடக்கில் உருவாக்கப்படவுள்ள 3 புதிய முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனித் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்துத் தூதுவர் விபே டி போயர் உள்ளிட்ட பல தூதரக உயர் அதிகாரிகளும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரும் பங்கேற்றிருந்தனர்.

#NorthernProvince #Jaffna #GovernorVedhanayagan #EUDiplomats #LandRelease #SriLanka #KTSPort #PalalyAirport #SriLankaNews #Srilankatoday

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More