53
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற பிரபல “Bite of Seattle” உணவுத் திருவிழாவின் போது ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் உயிரிழந்ததுடன், 2 வயது குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சியாட்டிலின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் Space Needle-க்கு அருகிலுள்ள Seattle Center வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு “Bite of Seattle” உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த வேளையில், மாலை 6.00 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் கடுமையான காயங்களுடன் Harborview Medical Center மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
2 வயது குழந்தையும் காயம்!
காயமடைந்தவர்களில் 2 வயது குழந்தையும் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு கை, கால், வயிறு உள்ளிட்ட உடற்பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒருவர் கைது – மேலும் ஒருவரை போலீசார் தேடுகின்றனர்!
சியாட்டில் காவல்துறையின் உதவி தலைமை அதிகாரி டைரோன் டேவிஸ் (Tyrone Davis) ஊடகங்களுக்கு வழங்கிய தகவலின்படி, சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில், இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது ஒருவரை ஒருவர் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சம்பவத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை!
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்தாலும், தற்போது பொதுமக்களுக்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.
நூற்றுக்கணக்கானோர் பீதியுடன் தப்பியோட்டம்!
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், இசை நிகழ்ச்சிகளையும் உணவகக் கடைகளையும் ரசித்துக் கொண்டிருந்த மக்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் அச்சத்தில் பல திசைகளில் ஓடி தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
நேரில் இருந்த சாட்சிகள், ஆரம்பத்தில் சிலர் பட்டாசு வெடிப்பதாக நினைத்ததாகவும், தொடர்ந்து பல சுற்றுகள் துப்பாக்கிச் சத்தம் கேட்ட பின்னரே மக்கள் பதற்றத்துடன் ஓடத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
FBI மற்றும் SWAT குழுக்கள் இணைந்து விசாரணை!
சம்பவத்திற்குப் பின்னர் சியாட்டில் காவல்துறை, FBI, ATF மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றன. சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவற்றின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேயரின் இரங்கல்!
சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் (Katie Wilson) இந்தச் சம்பவத்தை “மிகவும் கொடூரமான வன்முறைச் செயல்” என்று கண்டித்துள்ளார். “கலாசாரம், மகிழ்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடுவதற்காக நடைபெற்ற நிகழ்வு, சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூட்டால் துயரமாக மாறியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுடனும், காயமடைந்தோருடனும் எமது எண்ணங்கள் உள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை!
Gun Violence Archive தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுவரை 271-க்கும் மேற்பட்ட கூட்டுத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் (Mass Shootings) பதிவாகியுள்ளன. நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் சுடப்பட்டால் அந்தச் சம்பவம் “Mass Shooting” என வகைப்படுத்தப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து Seattle Center Monorail சேவை அன்றைய தினம் நிறுத்தப்பட்டு, மறுநாள் காலை மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

