53
2026 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மொத்தம் 286 கிலோ (Snatch – 126kg, Clean & Jerk – 160kg) எடையை வெற்றிகரமாக தூக்கி இரண்டாவது இடத்தைப் பெற்றார். தங்கப் பதக்கத்தை மலேசியாவின் முகமது அஸ்னில் பிடின் கைப்பற்றினார்.
இந்த வெற்றி, இந்தியாவின் பளுதூக்கும் அணிக்கு அந்த நாளில் கிடைத்த முக்கியமான பதக்கங்களில் ஒன்றாகும். முன்னதாக மீராபாய் சானு தங்கமும், ரிஷிகாந்தா சிங் வெள்ளியும் வென்றிருந்த நிலையில், ராஜா முத்துப்பாண்டியின் வெள்ளிப் பதக்கம் இந்தியாவின் பதக்கப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,
“2026-ஆம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.”
என்று தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில்,
“கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” எனப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு சர்வதேச அரங்கில் மீண்டும் பதக்க மேடையை அடைந்துள்ள ராஜா முத்துப்பாண்டியின் சாதனை, இந்திய விளையாட்டுத் துறைக்கும் குறிப்பாக தமிழக இளம் பளுதூக்கும் வீரர்களுக்கும் புதிய ஊக்கமாகக் கருதப்படுகிறது.
Spread the love

