56
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30-ஐ முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் பல ஆண்டுகளாக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இந்த மாநாட்டின் மூலம் தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக குறிப்பிட்டனர்.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இலங்கை அரசின் தற்போதைய உள்நாட்டு பொறிமுறைகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச தரத்தில் சுயாதீனமான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளே அவசியம் என்ற நிலைப்பாட்டை மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 30ஆம் திகதியை “International Day of the Victims of Enforced Disappearances” எனக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நாள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் உலகளாவிய நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இம்மாநாட்டில் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களும் பங்கேற்கும் வாய்ப்பு குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

