Dr முரளி வல்லிபுரநாதன்..
கடந்த 2 தினங்களாக மட்டக்களப்பு மீனவர்களினால் அவதானிக்கப்படும் கரைவலையில் பெருமளவு கடல் பாம்புகள் / விலாங்கு மீன்கள் அகப்படும் அசாதாரண நிகழ்வானது மேலதிக கவனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படவேண்டும்.
கடல் வளத்துறை அதிகாரிகளின் கருத்துப்போல் இந்த அசாதாரண நிகழ்வு கடலின் உப்புச் செறிவில் ஏற்படும் மாற்றம் மற்றும் நீரோட்டத் திசை மாற்றம் காரணமாக ஏற்படுமாயின் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளூர் மீனவர்களின் கருத்துப்படி 2004 சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன்பாகவே இத்தகைய மாற்றத்தை முதல் தடவையாக அவதானித்திருப்பதாகவும் இப்போது இரண்டாவது தடவையாக அவதானிப்பதாக தெரிவித்திருப்பதை முக்கியமான அபாய அறிகுறியாக கருத வேண்டியுள்ளது.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வரலாற்றியலாளர்கள் பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி தாக்கம் ஏற்படுவதற்கு முன்னராக பாம்புகளும் ஏனைய விலங்குகளும் அசாதாரண நடத்தையைக் காட்டுவதையும் அனர்த்தம் ஏற்படும் பகுதியில் இருந்து தப்பிச் செல்வதையும் பதிவு செய்திருக்கிறார்கள் (1).
குறிப்பாக பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் நுண்ணாற்றல் (1) (2) மிகவும் விருத்தி அடைந்து இருப்பது விஞ்ஞானிகளினால் அவதானிக்கப்பட்டு இருக்கிறது. பாரிய பூமி அதிர்ச்சி அல்லது சுனாமி ஏற்படுவதற்கு பல தினங்களுக்கு முன்னரேயே பல சிறிய அதிர்வுகள் பூமித்தட்டில் ஏற்படுகின்றன.
மேலும் 2014 இல் புவியியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இலங்கை மற்றும் சூழ்ந்திருக்கும் இந்து சமுத்திர பகுதியும் கடந்த காலத்தை போலல்லாது அதிகரித்த பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி தாக்கத்துக்கு உட்படக்கூடிய அபாயத்தில் இருப்பதைக் காட்டுகின்றன (3).
இதைவிட இந்திய வானிலை அறிக்கையின்படி அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டு வருவதாகவும் அடுத்த சில தினங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் கடும் மழை பொழியும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது (4).
எனவே அடுத்த சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் மீனவர்கள் மற்றும் சுனாமியினால் தாக்கப்படக் கூடிய கடல் கரையை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும்.
அடுத்த சில தினங்களுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது என்று கருத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 2016 ம் ஆண்டு வெளியிடப்பட்ட வறுமைக்கான புள்ளிவிபரங்களின் படி மட்டக்களப்பில் தமிழர்கள் ஏழ்மையில் உழல்வதாக காட்டும் நிலையில் (5) வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள இந்த மீனவர்களுக்கு உதவுமாறு தமிழர் பிரநிதிகளை கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் அனைத்து துறைசார் நிபுணர்களையும் கிழக்கில் அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.