Home இலங்கை கிளிநொச்சி இளைஞர் கொலைக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

கிளிநொச்சி இளைஞர் கொலைக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில்  இளைஞர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு 2 பிள்ளைகளின் தந்தைக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. 2010ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி கிளிநொச்சி உதயநகரில் வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது 29) என்பவர் போத்தலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கல்லுக்கட்டில் கிணற்றில் போடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில்   கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா இராஜேந்திரன் அல்லது ராசா ஆகிய இருவரும் மாங்குளம்  காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் எதிரிகளாக கண்ட  சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2011ஆம் ஆண்டு பெப்ரெவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.  விசாரணைகளின் போது இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நீருபிக்கமுடியவில்லை. அதனால் இரண்டாம் எதிரியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.

முதலாம் எதிரி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கொலை செய்யும் பொது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என முதலாம் எதிரியைக் குற்றவாளியாக நீதிமன்று காண்கிறது.

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபடுகின்றது. குற்றவாளிக்கு  ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது’ என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More