சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் பட விழாக்களுக்கு அரசாங்கம் கணிசமான நிதி உதவி வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கர்நாடக மாநில அரசு 10 கோடி நிதி உதவி வழங்குகின்றதென சுட்டிக்காட்டியுள்ள அவர் அடுத்த ஆண்டு தமிழக அரசு அதில் பாதியாவது நிதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அப்படி வழங்கினால் இந்திய அளவில் சிறப்பானதாக இந்த விழாவை நடத்துவோம் எனவும் சுஹாசினி தெரிவித்துள்ளார். 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்தத் திரைப்பட விழாவை நடிகர் அரவிந்த்சாமி தொடங்கி வைத்ததனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
என்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் ஆறு பிரிவுகளில் திரையிடப்பட இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் நடித்த இரு படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
மேலும் தமிழில் இந்த வருடம் வெளிவந்த 22 படங்கள் விழாவில் திரையிடலுக்குத் தேர்வாகி உள்ன. இந்த சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 21-ம்திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.