புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரையும் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஹார் மாநிலத்தில் அமைந்துள்ள புத்த மதத்தவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் புத்த கயாவில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில், புத்த மதத் துறவிகள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு பாட்னாவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன.இதில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் அவர் 3 ஆண்டுகாலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்க வேண்டும் என சிறார் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களும் நேற்று நிறைவடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீதமுள்ள 5 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் எதிர்வரும் 31-ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது