இலங்கை பிரதான செய்திகள்

நல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா? MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது?

குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…

நல்லிணக்க அரசாங்கம் என அழைக்கப்படும், தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? ஐக்கியதேசியக் கட்சியுடனான ஆளும் உறவை 2020 வரை தொடர்வதா? என்பது குறித்து விரைவில் குறிப்பாக அடுத்தவாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பௌசி, கடந்த இரண்டு வருட கால, இணக்கப்பட்டு அரசியல் முன் நகர்வில், பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைவாக டிசம்பர் 31ம் திகதி வரை அரசாங்கத்தில் நீடிக்க, கட்சி தீர்மானித்திருந்தது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் வாரத்தில் கூட்டப்படவுள்ள மத்திய குழுவில் இறுதித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கியதேசிய கட்சியுடனான தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகவும் கொழும்பின் முக்கிய அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014 நவம்பர் மாதம், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் அரசாங்கத்திலிருந்து, வெளியேறிய துணிச்சலான அரசியல் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க தான் தயார் என மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“இலஞ்சம் மற்றும் ஊழலின் பிடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான ஓரேயொரு வழி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதே” என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இலங்கையில் அதற்குப் பொருத்தமான அரசியல் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே என்றும் வலியுறுத்தி உள்ளார்.

“2014 நவம்பர் 21 ம் திகதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து வெளியேறும் துணிச்சலான முடிவை நான் எடுத்தேன், தற்போதும் அத்தகையதொரு மற்றுமொரு பிரதான நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளேன் இது நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டதாகயிருக்கும், மக்களுக்கு ஊழல் அற்ற அரசியல் தலைமையை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கும். நாட்டின் மீதும் மக்களின் மீதும் நான் கொண்டுள்ள பாசம் காரணமாக நான் எடுக்கவுள்ள இந்த நடவடிக்கையால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து நான் அஞ்சவில்லை. எனக்கு என்ன நடந்தாலும் நான் இதனை செய்வேன் இல்லாவிடில் எங்களால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது யாராவது இதனை செய்தே ஆகவேண்டும் இதனை முன்னெடுப்பவருக்கு இந்த நாட்டின் இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவு இருக்கும்” எனவும் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய அரசியல் சக்த்திகளுடன் ஐக்கியதேசியக் கட்சி முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது…

இதே வேளை நடைமுறையில் உள்ள தேசிய அரசாங்கத்தின் உள்ளே மிகப்பெரிய குழப்பம் ஒன்று தென்படுவதாக  ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26.12.17)) ஊடகவியலாளர்களைச் சந்தித்த பந்துள குணவர்த்தன,    மத்தியவங்கியில் இடம்பெற்ற பாரிய பிணைமுறி ஊழல் தொடர்பான அறிக்கை விரைவில் விசாரணை ஆணைக்குழுவால்  வெளியிடவுள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலர் பதவி விலக உள்ளதாக எதிர்வு கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் செயற்பாடுகளையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதற்கு ஆதரவு வழங்க மறுத்துள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்ட அவர்,   ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள பல முக்கிய அமைச்சுப்பொறுப்புகள் சிலவற்றையும்  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தன் வசப்படுத்தவுள்ளதாகவும் பந்துல  தெரிவித்துள்ளார்.

  

உள்ளூராட்சி தேர்தலின் பின், 2015 இல் சந்தித்த பாரிய மாற்றத்தை இலங்கை மீண்டும் எதிர்கொள்ளும் எனவும்,  உள்ளூராட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை, மாற்றத்தை கட்டியம் கூறும் எனவும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் அதன் பின் வரப்போகும், அனைத்து தேர்தல்களிளும் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் மீதும் தாக்கம் செலுத்தும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய அரசியல் முகங்களை தெரிவு செய்வதன் மூலம், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னான மாற்றத்தை மக்களால் ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

“இது மிகவும் முக்கியமான ஓரு தேர்தல் நாங்கள் இந்த தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளோம் இவை அனைத்தும் நாட்டை மாற்றும் நாங்கள் பின்னோக்கி செல்ல முடியாது. குறிப்பிடத்தக்க அரசியல் அனுபவம் உள்ளவன் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நான் எதிர்வுகூறுகின்றேன்” எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2015 இல் சந்தித்த பாரிய மாற்றத்தை நாடு மீண்டும் எதிர்கொள்ளும், புதிய முகங்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், அதேவேளை பழைய முகங்களை மக்கள் மறக்கும் நிலை ஏற்படும் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,  நாமல் ராஜபக்சவிற்கான பாதையை வகுக்கவே, மகிந்த ராஜபக்ஸ ஏன் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற விரும்புகின்றார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அண்மைய நாட்களாக வெளிவரும் இத்தகைய தகவல்கள் பிறக்கும் புதிய வருடத்தில் நல்லிணக்க அரசியும், தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers