Home இலங்கை இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி? பி.மாணிக்கவாசகம்…

இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி? பி.மாணிக்கவாசகம்…

by admin

அரசியல் கைதிகளின் விடுதலை மறந்து போன விவகாரமாக மாறிவிட்டது போல தோன்றுகின்றது. அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகப் பல தடவைகளில் வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறையற்ற ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பதே அரசாங்கத்தினதும், பேரின அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடாகும். ஆனால் உண்மையில் அவர்கள் பயங்கரவாதிகளல்ல. அவர்கள் அரசியல் கைதிகள். இதனையே அந்தக் கைதிகளும், தமிழ்த்தரப்பினரும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி கூறி வருகின்றார்கள்.

ஆனால் அரச தரப்பினர்; அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. தங்களிடம் அரசியல் கைதிகள் என்று எவருமே கிடையாது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றே அவர்கள் அடித்துக் கூறி வருகின்றார்கள்.

அரசியல் காரணங்களுக்காகவே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதேயொழிய, வெறுமனே பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை. ஆனால், இனவாதக் குட்டையில் ஊறித் திளைத்த ஆட்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை வெறுமனே பயங்கரவாதமாகச் சித்தரித்து, அதற்கு ஆதரவாகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உருவாக்கினார்கள். தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையின் நோக்கமும் அந்தச் சட்ட உருவாக்கத்தில் இழையோடி உள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு அதி உச்சத் தண்டனை சிறைத் தண்டனையே தவிர மரண தண்டனை கிடையாது. ஆனாலும், அந்தச் சிறைத் தண்டனையானது மரண தண்டனையிலும் பார்க்க மோசமானது. வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களும், வழக்கு முடிவடைந்து சிறைத் தண்டமன அனுபவித்து வருபவர்களும் அநேகமாக தண்டனை முடிவடைந்து வெளியில் வருவதற்கான சாத்தியம் அற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இவர்கள் சிறைச்சாலைகளிலேயே மடிந்து போகின்ற அவலமான நிலைமை நிலவுகின்றது. இவ்வாறு பத்து சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் மரணமடைந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாகத்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது மிக மிக பயங்கரமானது, கொடூரமானது, மோசமானது என்று பலராலும் வர்ணிக்கப்படுகின்றது. சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

காலம் கடத்துவதிலேயே கவனம்

உண்மையிலேயே ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போர் புரிந்த விடுதலைப்புலிகளுடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்குமேயானால், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், அந்தச் சட்டத்தை அரசாங்கம் இல்லாமல் ஒழித்திருக்க வேண்டும். ஆனால் அரசுகள் அதனைச் செய்யவில்லை.

யுத்தமோதல்களின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன என்று பட்டியலிட்டுள்ள ஐநாவும், ஐநா மனித உரிமைப் பேரவையும் அந்த உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கத்தின் மீது மட்டும் ஐநா முன்வைக்கவில்லை. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரச படைகளும், விடுதலைப்புலிகளும் ஆகிய இரு தரப்பினருமே உரிமைகளை மீறியிருக்கின்றார்கள் என்றே குற்றம் சுமத்தியிருக்கின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததையடுத்து, உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்றுச் செயற்படுவதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஐநாவிடம் உறுதியளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கமும், உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறி, நிலைமாறு காலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐநாவிடம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட இது தொடர்பிலான தீர்மானங்களுக்கு இந்த அரசாங்கம் ஆதரவளித்து, இணை அனுசரணை வழங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கும் ஒத்துழைத்திருந்தது.

இந்த பொறுப்பேற்றலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் செய்து சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவோம் என்ற உறுதிப்பாடும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு இன்னும் இல்லாமல் செய்யவில்லை. அதற்கான நடவடிக்கையை இழுத்தடித்து காலம் கடத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

எதிர் மறையான விளைவுகளே ஏற்பட்டுள்ளன

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகிவிட்ட போதிலும், இந்தச் சட்டத்தை ஆதரவாக வைத்துக் கொண்டே, ஆட்சியாளர்கள் அரசியல் கைதிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றார்கள்.

ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்ற பயங்கரவாதம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் நாட்டில் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் அது தலையெடுத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நோக்கத்திற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக ஐநாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கிய உறுதிமொழியை புறந்தள்ளிய பழிச்சொல்லுக்கே ஆளாக்கியிருக்கின்றது..

அரசாங்கம் கூறுகின்ற பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க விடக் கூடாது என்றால், அது தோற்றம் பெறுவதற்கான காரணம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை அசாங்கம் துரிதமாகவும், நேர்மையான முறையிலும் முன்னெடுக்க வேண்டும்.

அந்த வகையில் முதற் கட்டமாக சிறைச்சாலைகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும். இதன் மூலம் அரசாங்கம் தனது நல்லெண்ணத்தையும், பயங்கரவாதம் நாட்டில் உருவாகக் கூடாது என்ற நேர்மையான அரசியல் மனப்பக்குவத்தையும் வெளிப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

அத்துடன் அரச தரப்பினர் குறிப்பிடுகின்ற பயங்கரவாதம் உருவாகுவதற்கு காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும். அரசியல் தீர்வின் மூலமாக மறுக்கப்பட்ட தமிழ் மக்களுடைய உரிமைகள் நிலைநிறுத்தப்படுமானால், போராட்டங்களும் இருக்காது. ஆட்சியாளர்கள் அதீத கற்பனையில் எதிர்பார்க்கின்ற பயங்கரவாதமும் தலையெடுக்க மாட்டாது.

அரசியல் கைதிகளின் விடுதலையும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையும் உண்மையில் தேசிய நலன் சார்ந்த விடயங்களாகும். தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தால், தமிழ் மக்கள் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கும், அவர்களின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்வதற்கும் வழியேற்படுத்தி இருக்கும். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. அரசாங்கத்தின் இந்தப் போக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றது.

என்ன நடக்கின்றது?

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அந்தக் கைதிகளே மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டங்களும், சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்திருந்தன. இந்தப் போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கவும், அதற்கு மேலும் வலுவூட்டுவதற்குமாக வெளியில் பல்வேறு பொது அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும்கூட போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியிருந்தன..

விசேடமாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஆரம்ப காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். அவருடைய உறுதிமொழி எழுத்து வடிவத்தில் கடிதமாக சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தை சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் சிறைக் கைதிகளுக்கு வாசித்தளித்தார்.

ஜனாதிபதியின் இந்த உறுதிமொழியும், அது வழங்கப்பட்ட விதமும் ஒரு வேடிக்கை நிகழ்வாகவே நடந்து முடிந்து போனது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அரசாங்கத் தரப்பில் எடுக்கப்படவில்லை. மாறாகக் கண்துடைப்புச் செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டு சில கைதிகள் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு சென்றவர்களும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கமைவான நடவடிக்கையாக இடம்பெறவில்லை. அவர்களின் வழக்கு விசாரணைகளின் அடிப்படையிலேயே அந்த பிணை வழங்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று எத்தனையோ போராட்டங்கள் இந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடத்தப்பட்டன. ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் எத்தனையோ கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது நல்லெண்ண வெளிப்பாடாகவோ அரசியல் தைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அல்லது அவர்களின் நியாயமான விடுதலையை நோக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல. சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என்று எவரையும் அரசாங்கம் தடுத்து வைத்திருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பயங்கரமான குற்றச் செயல்களைப் புரிந்த பயங்கரவாதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய முடியாது. அதற்கு நீதிமன்ற விசாரணைகளும், சட்டம் தொடர்பிலான நடைமுறைகளும் இடமளிக்காது என்ற நொண்டிச்சாட்;டுக்களையே ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர். இன்னும் கூறி வருகின்றனர்.

சட்ட மீறல்களும் உரிமை மீறல்களும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வரையறையற்று எவரையும் தடுத்து வைத்திருக்க முடியாது. அந்தச் சட்டத்திற்கும் வரையறைகள் இருக்கின்றன. வரைமுறைகளும் இருக்கின்றன. அந்த சட்டத்தின் வரையறைகளையும், வரைமுறைகளையும் விதிகளையும் மீறிய வகையிலேயே நியாயமற்ற முறையில் அரசாங்கம் அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருக்கின்றது.

அரசியல் கைதிகளின் விசாரணைகள் முடியவில்லை என்ற நொண்டிச்சாட்டை பல வருடங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்யும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றார்கள். அந்த விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்ற உப்புச்சப்பற்ற காரணத்தையும் அவர்கள் கூறி வருகின்றார்கள்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து அதனடிப்படையல் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றஞ்சாட்ட முடியாவிட்டால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதுவே சட்டங்கள் தொடர்பிலான நிர்வாக நடவடிக்கைகளாகும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பல அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இத்தகைய நடவடிக்கைகளை ஏன் சட்டவிரோத நடவடிக்கைகளாகக் கருத முடியாது? சட்டத்திற்கு அமைவாகத்தானே சிறைச்சாலைகளில் கைதிகளைத் தடுத்து வைத்திருக்க முடியும்;? வுpசாரணைகள் முடியவில்லை. குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்களைத் தடுத்து வைத்திருப்பதை, அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று ஏன் கொள்ள முடியாது?

அரசியல் கைதிகள் மூன்று நான்கு வருடங்கள் தொடக்கம் பத்து இருபது வருடங்களுக்கு மேலான நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்து, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும்கூட, சட்ட ரீதியான சிறைத்தண்டனைக் காலத்திற்கும் அதிகமான காலம் சிறையல் வாடுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

சந்தேகத்தின்பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்கு அவசியமான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் பல வருடங்கள் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். விசாரணைகள் ஒரு வழியாக முடிவடைந்து வழக்குத் தாக்கல் செய்யும் போது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதற்காக வழங்கப்படுகின்ற சிறைத் தண்டனைக் காலத்தையும்விட அதிக காலத்தை வழக்கு ஆரம்பமாவதற்கு முன்பே அனுபவித்துவிடுகின்றார்கள்.

சிறைச்சாலை மரணங்களும் மனிதாபிமானமும்

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும், வழக்கு விசாரணைகள் துரிதமாக நடத்தப்படுவதில்லை. ஆறுமாதங்கள் சில வேளைகளில் ஒரு வருடத் தவணையும் குறிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் கூறுகின்றார்கள். வழக்குத் தவணைகளின்போது அரச தரப்பினர் நீதிமன்றத்தில் தங்களுடைய வசதி வாய்ப்புக்கு ஏற்ற வகையிலேயே முன்னிலையாவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே வழக்கு விசாரணைகள் வருடக்கணக்கில் இழுபட்டுச் செல்கின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகளின் நிலைமைகள், விசாரணை முறைமைகள், சிளைக்கைதிகளின் தனிப்பட்ட உளவியல், வாழ்வியல், குடும்பவியல் நிலைமைகள் போன்ற பல்வேறு காரணங்களினால் அநேகமாக அனைத்து அரசியல் கைதிகளும் நோயுற்றவர்களாகவும், உளவியல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகியவர்களாகவுமே திகழ்கின்றார்கள்.

இவர்களுக்கு உரிய வைத்திய வசதிகளும், உளவியல் ஆறுதலுக்கான வாய்ப்புக்களும் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தேகாரோக்கியம் பாதிக்கப்பட்டபவர்களாகவும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மனம் தளர்ந்தவர்களாகவும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய சிறைக்கைதிகளில் அனேகமானவர்கள் குறிப்பாக நீண்ட காலம் சிறைச்சாலைகளில் இருந்து முதுமை எய்தியவர்கள் நடைப்பிணங்களாக நேரிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைவாழ்க்கையின் பாதிப்பு காரணமாக சிறைச்சாலைகளிலேயே பத்துப் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர்கள் தொடர்பில் பின்வரும் கிடைத்துள்ளன.

1 சின்னையா தெய்வேந்திரம் (31) வட்டுக்கோட்டை சிறைச்சாலை வைத்தியசாலையில் 21.09.2009 இல் இறந்துள்ளார். 2 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து போது சம்பவம் நிகழ்ந்துள்ளது

2 சின்னத்துரை தர்மலிங்கம் (54) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் 2005 மே மாதம் இறந்தவர். தீர்ப்புத் தண்டனை வழங்கப்பட்டு வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் 7 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

3 பிரான்சிஸ் நெல்சன் (37) மகசின் சிறைச்சாலையில் 02.092013 இறந்தவர். 5 வருடங்களாக மேன்முறையீட்டு வழக்கின் கைதியாக இருந்தவர்.

4 விஸ்வலிங்கம் கோபிதாஸ் (41) மகசின் சிறைச்சாலையில் 7 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த தண்டனைக் கைதி 29.02.2014 இறந்து போனார்.

5 ஜி.ஜோசப் (58) விசாரணைக் கைதியாக நீர்காழும்பு சிறைச்சாலையில் இருந்தவர் 2012 செப்டம்பர் மாதம் இறந்தார்.

6 சின்னத்துரை காத்தாயம்மா (61) தண்டனைக் கைதியாக 11 வருடங்கள் இருந்து சிறைச்சாலையில் 2013 ஆம் ஆண்டு இறந்து போனார்.

7 சுந்தரம் சதீஸ்குமார் (33) விசாரணைக் கைதியாக 8 வருடங்கள் இருந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14.05.2015 இல் இறந்தார்.

8 குணரத்தன கஜதீர (58) விசாரணைக் கைதியாக 10 வருடங்கள் இருந்து 01.12.2016 இல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்து போனார்.

9 சண்முகம் தியாகன் (70) 10 வருடங்கள் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்து தேசிய வைத்தியசாலையில் 15.03.2018 இல் இறந்து போனார்.

10 முத்தையா சகாதேவன் (62) 13 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்தவர் 22.06.2019 இல் தேசிய வைத்தியசாலையில் இறந்து போனார்.

தமிழ் அரசியல் கைதிகள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்செயல்களுக்குரிய தண்டனையைவிட அதிகப்படியான தண்டனை அனுபவித்து சிறைச்சாலையிலேயே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய மிக மோசமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதையே இந்த பத்துப் பேரின் மரணங்களும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிரபராதியென விடுதலை செய்யப்பட்;டவர்களும், தண்டனைக் காலம் முடிவடைந்து வெளியில் வந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லையென்று மறுப்பதற்கில்லை.

ஆனால் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் சிறைச்சாலைகளில் அவலமான நிலைமைகளுக்கு ஆளாகி மரணத்தைத் தழுவிக் கொள்கின்ற மோசமான நிலைமை நீடிப்பதை ஒரு ஜனநாயக நாட்டின் நீதியான செயற்பாடாகவோ நல்லாட்சியின் அம்சமாகவோ கொள்ள முடியாது.

இதனை இன அழிப்பு சிந்தனை சார்ந்த ஒரு மோசமான நடவடிக்கையின் விளைவாகவே நோக்க வேண்டி உள்ளது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசியல் கைதிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டு அவர்கள் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுவே மோசமான ஒரு நீண்டகால யத்தத்தின் பின்னர் ஒரு நாட்டில் நல்லிணக்கமும் ஐக்கியமும் உருவாகுவதற்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Spread the love
 
 
      

Related News

1 comment

Rev. Dr. K. Saravanapavan July 10, 2019 - 2:01 pm

பயங்கரவாத தடைச்சட்டமே, படுபயங்கரவாதமாய்யுள்ளது . இதைக்கேட்பார் யார் உண்டு. நீதி எங்கே.
தேவனே இரங்கவேண்டும், அவரே தம் கரத்தைக் கண்பிக்கவேண்டும். அப்போஇந்நிலை மாறும்

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More