குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி குற்றவாளி என தம்மை அறிவித்தால் பதவியை விலகுவதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அந்த இடத்தில் இடம்பெற்ற மெய்யான சம்பவங்கள் பற்றிய தகவல்களை வெளியிடத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும் உலகின் மூன்றாவது பெரிய கப்பலான ஹைபெரியான் ஹைவே என்னும் கப்பலை விடுவித்தமைக்காக தமக்கு சர்வதேச கடல் அமைப்பினால் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு நாட்களாக குறித்த கப்பலையும் மற்றுமொரு கப்பலையும் ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் தடுத்து வைத்திருந்தனர் எனவும் நேரடியாக கடற்படையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தாக்குதல் நடத்தியதாக ஊடகவியலாளர் வழக்குத் தொடர்ந்தால் அந்த வழக்கில் ஆஜராகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சார்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டதாகவும் தமது சார்பிலும் காண்பிக்கப்படாத சில வீடியோக்கள் காணப்படுவதாகவும் அவை எதிர்காலத்தில் காண்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.