குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாக்குதல் சம்பவம் குறித்து கடற்படைத் தளபதியிடமே அறிக்கை கோரியது ஏற்புடையதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தார் எனவும், இது கள்வனைப் பற்றி கள்வனின் தாயிடம் ஜோதிடம் பார்ப்பதற்கு ஒப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர நியமனம் வழங்கும் நோக்கில் ஹம்பாந்தோட்டை பணியாளர்கள் துறைமுகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும், ஏதேனும் சந்தர்ப்பத்தில் பணி நீக்கப்பட்டால், தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மீளவும் அவர்களுக்கு பணி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.