Home இலங்கை சாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

சாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin

ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் உயிர்ப்புக்கு பெண் அவசியமானவள். தமிழ் சமூகத்தில் பெண்ணை தெய்வாக போற்றுகிற, சினம் கொண்டவளாக பார்க்கிற, நீதி வேண்டுபவளாக பார்க்கிற நம்பிக்கைகளும் தொன்மங்களும் உண்டு. ஈழமெங்கும் கண்ணகி என்றும் அம்மன் என்றும் பெண் வழிபாடுகள் பக்தியோடும் வீரத்தோடும் நீதியோடும் வணக்கப் பண்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கை அரசு இன ஒடுக்கல் மேலாதிக்கச் சிந்தனையுடன் தமிழ் சமூகத்தை ஒடுக்கத் தொடங்கியபோது தமிழ் பெண் சமூகத்தை திட்டமிட்டு அழித்தது.
வடக்கு கிழக்கில் சிங்களப் படைகள் நிலை கொள்ளத் தொடங்கிய காலத்தின் பின்னர் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. துப்பாக்கிகளுடன் ஆண்குறிகளையும் இன அழிப்புச் செய்யும் கருவியாக இலங்கை அரச படைகள் உபயோகித்தன. உலகில் மிக மிக மோசமான வன்முறையாக கருதப்படும் பாலியல் வன்முறையை இலங்கை அரச படைகள் சுதந்திரமாகவும் அரச அங்கீகாரத்துடனும் மேற்கொண்டன என்பதற்கு சாரதாம்பாள்  என்ற ஈழப் பெண்ணின் கொலையும் ஒரு உதாரணமாகும்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் இரண்டு பிள்ளைகளின் தாய். டிசம்பர் 28. 1999ஆம் ஆண்டு.  இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்புணரப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள் சாரதாம்பாள். கொலை செய்யப்பட்ட அவளின் உடலை சருகுகளால் மூடி விட்டுச் சென்றனர் இலங்கை அரச கடற் படைகள். சாரதாம்பாளின் வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த கடற்படை முகாம் அமைந்திருந்தது. சாரதாம்பாளும் அவரது தந்தையும் சகோதரரும் கறுப்பு உடையில் வந்த இராணுவத்தினரால் கடத்தப்பட்டனர்.
வன்புணர்ந்து கொல்லப்பட்ட நிலையில் சாரதாம்பாளின் உடல் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதாம்பாள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதை ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாரதாம்பாளின் கொலையை கண்டித்து ஊர் வெகுண்டது. தமிழர் தாயகத்தில் கடும் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டங்களை கண்ணுற்ற இலங்கை அரசு, சாரதாம்பாளின் உடலை மருத்துவ பரிசோதனை செய்தது. உடலை மருத்துவப் பரிசோதனை செய்த அதிகாரி, அவரது வாயில் உள்ளாடையை திணித்து, அவரை கொலையாளிகள் கொன்றதாகவும், இறப்பதற்கு முன்னராக அவர் பலவந்தமாக பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார். சாரதாம்பாளுக்கு நடந்த அநீதியை நடுநிலையுடன் உறுதிசெய்த அந்த மருத்துவ அறிக்கையும் சாரதாம்பாளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா, இக் கொலை தொடர்பில் விசாரணை நடப்பதாக காட்டுவிக்க விசாரணை குழு ஒன்றை அமைத்தார். அரச இராணுவத்தின் பாலியல் வன்முறைகளை குறித்து மிகவும் சிறிய அளவிலேயே விசாரிக்க முடிந்ததாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கவனிக்கும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி கூறினார். அத்துடன் இராணுவத்தினரின் பாலியல் குற்றச் சாட்டுக்களை குறித்து விசாரிக்க, அரசு ஒத்துழைக்கவில்லை என்று சந்திரிக்கா அரசு மீது குற்றம் சுமத்தினார்.
இலங்கையில், தமிழ் பெண்களை வன்புணர்ந்து அழிப்பது அரச படைகளுக்கு  பதவி உயர்வுகளையும் தோதான இடமாற்றங்களையுமே அளித்திருக்கிறது. இந்த வயைில் சாரதாம்பாளை வன்புணர்ந்து கொலை செய்த குற்றவாளிகள் தோதான இடமாற்றங்களைப் பெற்று வழக்கிலிருந்து தப்பிச் சென்றனர். இந்தப் படுகொலை வழக்குத் தொடர்பில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களத்தால் கூறப்பட்டு 200மே அளவில் வழக்கு செயல் இழந்தது.
வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட அவளின் உடலோ, மருத்துவ அறிக்கையோ, ஊர்ச் சனங்களின் கண்ணீரோ, தாயகத்தின் எழுச்சியோ, மனித உரிமை ஆர்வலர்களின் எடுத்துரைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களின் கண்டன அறிக்கைகளோ, சிங்கள அரசின் நீதிமன்றத்தின் முன்னால் கணக்கில் எடுக்கப்படவில்லை. சாரதாம்பாளுக்கு நீதி கிடைக்கவில்லை. ஒன்றே ஒன்றுதான் நடந்தது. சாரதாம்பாள் கொல்லப்பட்டு ஆறு வருடங்களின் பின்னர், அதுவும் ஒரு மார்கழி மாதம் இளையதம்பி தர்சினி என்ற இளம் பெண் அதே கடற்படைகளால் அதே புங்குடுதீவில் கிணறொன்றில் கொன்று வீசப்பட்டாள்.
1999ஆம் ஆண்டு சாரதாம்பாள் கொல்லப்பட்ட நிகழ்வு இலங்கை அரசின் ஈழ இனப் பெண்களுக்கு எதிரான கோர முகத்தை உலகத்திற்கு காட்டியதொரு முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. இலங்கை இனப்பிரச்சினையில், இலங்கை அரசின் இன வன்செயல்கள் குறித்து, ஈழ இனப் பெண் ஒடுக்குமுறைகள் குறித்து சல சலப்பை உருவாக்கியது. அதைப்போலவே 2005, டிசம்பர் 16 ஆம் நாள் நடந்த தர்சினி இனப்படுகொலை நான்காம் ஈழப்போருக்கு கதவு திறந்தது. இவை எவற்றையும் கண்டஞ்சாத இலங்கை அரசு மேலும் மேலும் இனப்படுகொலைகளைப் புரிந்து ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இசைப்பிரியாக்களை நசுக்கியது.
சாரதாம்பளுக்கு மறுக்கப்பட்ட நீதியே, இசைப்பிரியாக்களும் மறுக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் அத்தனை சனங்களுக்கும் மறுக்கப்பட்டன. இலங்கை அரசின் நீதியமைப்பில் அழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதற்கு சாரதாம்பாள் கொலை தக்க எடுத்துக்காட்டு. இத்தகைய அனைத்துக் கொலைகளுக்கும் நீதியைப் பெற நம்பகமான சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட்டு மறுக்கப்பட்ட நீதி,  நிலைநாட்டப்படவேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More