167
தகவல்கள் கசிவதனை தடுப்பதற்கான திட்டமிட்ட கொலையா? குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-
காணாமல் போனவரை மீட்டு தருவதாக கூறி, பணம் பெற்று மோசடி செய்த நபரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்த நிலையில் , பொலிஸ் பாதுகாப்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த வைகுந்தன் எனும் இளைஞர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த வேளை வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த ஆயுத தாரிகளால் கடத்தி செல்லப்பட்டார்.
அதன் பின்னர் கடத்தப்பட்டவர் தொடர்பில் எந்த விதமான தகவலும் அற்ற நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட இளைஞனின் வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் குறித்த இளைஞர் வவுனியாவில் உள்ள யோசப் முகாமில் இருப்பதாகவும் , அவரை இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் ஊடாக அவரை மீட்க முடியும் எனவும் , அவரை தொடர்பு கொள்ள வேண்டும் எனில் இந்த தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என கடிதத்தில் தொலைபேசி இலக்கம் ஒன்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட இளைஞரின் சகோதரன் கதைத்த போது, கடத்தப்பட்டவர் உயிருடன் வவுனியா யோசப் முகாமில் இருப்பதாக கூறி அவரை மீட்க பணம் தர வேண்டும் என கோரியுள்ளார்.
கடத்தப்பட்ட சகோதரனை மீட்க 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
அதனை அடுத்து குறித்த நபர் கேட்ட பணத்தினை தருவதாக கடத்தப்பட்டவரின் சகோதரன் கூறியதை அடுத்து , தொலைபேசியில் உரையாடிய நபர் வீட்டுக்கு வந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தினை சகோதரனிடம் இருந்து பெற்று சென்றுள்ளார்.
அதன் பின்னர் அந்த தொலைபேசியில் இலக்கத்தில் இருந்து கடத்தப்பட்ட இளைஞர் போன்று ஒருவர் வீட்டாருடன் உரையாடி யுள்ளார். அதனை தொடர்ந்து வேறு ஒருவர் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட இளைஞரை விடுவிக்க வேண்டும் எனில் மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என கோரியுள்ளனர்.
அதற்கும் வீட்டார் ஒத்துக்கொண்டதை அடுத்து , முன்னர் வீட்டுக்கு பணம் வாங்க வந்த நபர் மீண்டும் கடத்தப்பட்ட இளைஞரின் வீட்டுக்கு சென்று மேலதிக 50 ஆயிரம் ரூபாயையும் வாங்கி சென்று உள்ளார்.
அதன் பின்னர் குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பற்று போனது சிறிது காலத்தின் பின்னர் அந்த தொலைபேசி இலக்கம் வேறு நபர் பாவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை (நேற்று) கடத்தப்பட்ட இளைஞரின் சகோதரன் யாழ்.நகர் பகுதிக்கு வந்த வேளை , தான் பணம் கொடுத்து ஏமார்ந்த நபரை வீதியில் கண்டு உள்ளார்.
உடனேயே அந்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்து முறைப்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாண பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
மோசடி நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம்.
அதன் பின்னர் முறைப்பட்டாளர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டவராக இருந்தமையால் மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்காக , யாழ்ப்பாண பொலிசார் இருவர் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்யப்பட்ட நபரை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்ட நபரின் உடலில் மாற்றங்கள் காணப்பட்டதுடன் , அவரது நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதனால் , குறித்த நபரை தாம் பொறுப்பெடுக்க முடியாது எனவும் , அவரை உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிசாருக்கு அறிவித்தார்.
வைத்திய சாலையில் உயிரிழப்பு.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிசார் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை வைத்திய சாலையில் குறித்த நபர் உயிரிழந்து உள்ளார்.
குறித்த நபர் கண்டி பகுதியை சேர்ந்தவர் எனவும் , தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் தற்போது வசித்து வருபவருமான 57 வயதுடைய கிருஷ்ணன் என்பவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
காணாமல் போனவரை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார் என கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் இருந்த வேளை உயிரிழந்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் நெருங்கிய தொடர்பு உடையவர் எனவும் , பலரிடம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் , ஸ்டீபன் என பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி மேஜர் தர அதிகாரி எனவும் , பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதியில் இடைமறித்த மர்ம பெண் யார் ?
அதேவேளை குறித்த நபரை யாழ்ப்பாண பொலிசார் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற வேளை இடை வழியில் வாகனத்தை மறித்த பெண்ணொருவர் பை ஒன்றினை கொடுத்ததாகவும் , அந்த பையினுள் , ஒரு போத்தல் இருந்ததாகவும் , அதனுள் இருந்த திரவத்தை குடித்ததை அடுத்தே குறித்த நபரின் உடலில் மாற்றங்கள் தென்பட்டதாகவும் தெரிவிக்க படுகின்றது.
அந்த பெண் கொடுத்தது விஷ மருந்தா ? என்பது தொடர்பிலும் , அதனை கொடுத்த பெண் யார் ? என்பது தொடர்பிலுமான விசாரணைகளை தற்போது பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
Spread the love