176
குளோபல் தமிழ் செய்தியாளர்
மிகக் குறுகிய அளவு ஆசிரியர்களின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மதிப்பும் அழிக்கப்படுவதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சியில் வலயக் கல்விப் பணிமனையின் உலக ஆசிரியர் தின நிகழ்வில் தலைமை உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர்களை மதிபளிக்கும் நிகழ்வில் ஆசிரியர்களின் மதிப்பை அழிக்கும் விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர், 0.2வீதமான ஆசிரியர்களின் செயற்பாட்டை வைத்து 99 வீதமான ஆசிரியர்களின் மதிப்பை அழிக்கும் செயற்பாட்டை ஊடகங்கள் மேற் கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 196 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மிகவும் பின்தங்கிய பல பாடசாலைகளில் எண்பது சதவீகித்திற்கு மேற்பட்ட சித்தி எய்தப்பட்டுள்ளதாகவும் வசதிவாய்ப்பற்ற நிலையிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் சாதனை செய்துள்ளதாக கூறினார்.
மிகவும் பின்தங்கிய மாயவனூர் பகுதியை சேர்ந்த மாணவரே மாவட்டத்தின் முதல்நிலையை எய்தியிருப்பதாகவும் பூநகரி, ஞானிமடம், முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களும் சிறந்த சித்தி வீகிதத்தை காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலத்தில் 32 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி கூட்டறவு மண்டபத்தில் நடைபெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலைப் பேராசிரியர் க. சின்னத்தம்பி கலந்துகொண்டார்.
பிரதீபா பிரபா விருது பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள், ஓய்வுநிலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், கல்வி உத்தியோகத்தர்கள் ஆகியோர் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வட மாகாண சபை உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Spread the love